/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நுாறு நாள் திட்டத்தில் முறைகேடுகளை களைய உறுதி
/
நுாறு நாள் திட்டத்தில் முறைகேடுகளை களைய உறுதி
ADDED : ஜூலை 11, 2025 11:23 PM

பந்தலுார், ; நுாறு நாள் வேலை திட்டம் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம், பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது.
ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணியம் தலைமை வகித்தார்.
அதில், 2014--15ம் ஆண்டு முதல், 2024--25ம் ஆண்டு வரையிலான, சமூக தணிக்கையில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை விபரங்கள் குறித்தும், குறைபாடுகள் குறித்தும் வட்டார வள பயிற்றுனர் கார்த்திராஜா விளக்கம் அளித்தார்.
அதில், '2024-25ம் ஆண்டு தணிக்கையின் போது, சில இடங்களில் அறிவிப்பு பலகை வைக்காதது; கூடுதலாக செலவு செய்தது; பணியாளர்கள் வராமலே, பதிவு செய்தது; ஒரே இடத்தில், பல்வேறு நிதிகள் மூலம் ஒரே பணியை மேற்கொண்டது,' குறித்து தெரிய வந்ததாக கூறினார்.
சமூக ஆர்வலர் சங்கீதா பேசுகையில், ''திட்டத்தின் கீழ் ஒரே பணித்தள மேற்பார்வையாளர், பல ஆண்டுகளாக வேலை செய்வதால், ஊழல் மற்றும் குளறுபடிகள் அதிகரித்து உள்ளது.
100 நாள் முடிந்தவுடன் மற்றொரு பணித்தள மேற்பார்வையாளர் நியமிக்கவும், வயதான உள்ளூரில் உள்ள மக்களுக்கு திட்டத்தில் பணி வழங்க வேண்டும். மேலும், கேரளாவில் வேலை செய்யும் பலருக்கும், திட்டத்தில் பணி வழங்கி நிதிமுறைகேடு செய்துள்ள பணித்தள மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணியம் கூறுகையில், ''திட்ட பணிகள் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு மட்டுமே பயன்பெற வேண்டும். விதிமீறல் மற்றும் முறை கேடுகளில் ஈடுபடுவது யாராக இருந்தாலும், அவர்கள் குறித்து புகார் கொடுத்தால் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு நேரடியாக சென்று சேர வேண்டுமே தவிர, இடைத்தரகர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் பாதிப்பு ஏற்பட கூடாது,'' என்றார். கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மனுக்களை கொடுத்தனர்.
முகாமில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், தலைமையிட துணை தாசில்தார் பொன்னரசு மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

