/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் உயிர் பலியால்... அச்சத்தில் பயணிகள்! குன்னுார்- ஊட்டி சாலையில் உடனடி பணி அவசியம்
/
தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் உயிர் பலியால்... அச்சத்தில் பயணிகள்! குன்னுார்- ஊட்டி சாலையில் உடனடி பணி அவசியம்
தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் உயிர் பலியால்... அச்சத்தில் பயணிகள்! குன்னுார்- ஊட்டி சாலையில் உடனடி பணி அவசியம்
தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் உயிர் பலியால்... அச்சத்தில் பயணிகள்! குன்னுார்- ஊட்டி சாலையில் உடனடி பணி அவசியம்
ADDED : ஏப் 21, 2025 04:58 AM

குன்னுார்: நீலகிரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள், முழுமை பெறாமல் இருப்பதால், கோடை சீசனுக்கு வரும் ஆயிரக்கணக்கான வாகனங்களின் ஓட்டுனர்கள் சிரமப்படுவதுடன், அவ்வப்போது, விபத்து ஏற்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னுார், கல்லார் வரை, 41 கி.மீ., துாரம் கொண்ட தேசிய நெடுஞ்சாலையில் கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக்க பணிகள் துவங்கி நடந்து வந்தது. அதில், மேட்டுப்பாளையம்- குன்னுார் வரையில் பல இடங்களிலும் தடுப்பு சுவர்கள் அமைக்கவில்லை. பர்லியார் உள்ளிட்ட சில இடங்கள் விரிவாக்கம் செய்யப்படவில்லை.
குறிப்பாக, ஊட்டி-குன்னுார் சாலை பணிகள் முழுமை பெறாமல் பாதியில் விடப்பட்டது. அதில், சாலையோரம், 90 டிகிரி செங்குத்தாக மண் தோண்டப்பட்டு, மழை நீர் செல்லும் கல்வெட்டுகள் ஏற்படுத்தப்பட்டது. எனினும், முழுமையாக செப்பனிடாமல் பாதியில் விடப்பட்டுள்ளது.
இதனால், ஊட்டி லவ்டேல் முதல், மந்தாடா, எல்லநள்ளி, அருவங்காடு, பாய்ஸ்கம்பெனி, வெலிங்டன், பிருந்தாவன், பாலவாசி, சாமன்னா பார்க் உட்பட சாலையோரம் தற்போது வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டது.
வி.ஐ.பி.,கள் வந்தால் பரபரப்பு
நீலகிரி மாவட்டத்துக்கு வி.ஐ.பி.,கள் விசிட் செய்யும் போது மட்டும், தேசிய நெடுஞ்சாலை துறையினர் மேற்கொள்ளும் 'பேட்ச் ஒர்க்' சில நாட்கள் மட்டுமே தாக்கு பிடிக்கிறது. சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோத்தகிரி வழியாக வந்த போது அவருடன் பல அதிகாரிகள், அமைச்சர்கள் வந்தனர்.
அப்போது, அவசர அவசரமாக, மேற்கொண்ட பணிகளில் தற்போது மேடும் பள்ளமாக சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில், பிளாக் பிரிட்ஜ் முதல் பாய்ஸ் கம்பெனி வரையில், கேபிள் பதிக்க குழி தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன. கோடை சீசனுக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
தொடரும் உயிர் பலி
இந்நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டும் சாலைப்பணி முழுமை பெறாத காரணத்தால் அருவங்காடு முதல் பாய்ஸ் கம்பெனி வரை பல விபத்துகள் நடந்துள்ளன. அதில், 3 உயிர்கள் ஒரே இடத்தில் பலியாகி உள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அருவங்காட்டில் சாலையோர ஜல்லிகற்கள் அடித்து சென்ற இடத்தில் பொக்லைன் உதவியுடன் தற்காலிக பணி மேற்கொண்டாலும், அடிக்கடி பெய்யும் மழையால் ஜல்லி கற்கள் அடித்து செல்லப்படுகின்றன.
மந்தாடாவில் விரிவாக்கம் செய்த இடம், சிறிது, சிறிதாக விரிசல் ஏற்பட்டு வருவதால் தடுப்பு சுவர் இடிந்து, சாலை துண்டிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் நெடுஞ்சாலை துறை தீர்வு காணவில்லை.
தன்னார்வலர் சஜீவன் கூறுகையில்,''கோடை சீசனில் சுற்றுலா வாகனங்கள் அதிகம் செல்லும் நிலையில், தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவில் முடித்து தீர்வு காண கோரி நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு ஏற்கனவே மனுக்கள் அனுப்பியும் தீர்வு காணப்படாததால், விபத்து ஏற்படுவது அதிகரித்து, உயிர் பலியும் தொடர்கிறது.
எனவே, மீண்டும் பாதிப்புகள் ஏற்படும் முன், கோடை சீசனை முன்னிட்டு, தேசிய நெடுஞ்சாலை துறையினர், மலை மாவட்ட சாலையில் பாதியில் விடப்பட்டுள்ள பணிகளை போர்க்கால அடிப்படையில், தரமானதாக மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.

