/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட தேர்தல் அதிகாரி மீது உதவி தேர்தல் செலவின பார்வையாளர் புகார்
/
மாவட்ட தேர்தல் அதிகாரி மீது உதவி தேர்தல் செலவின பார்வையாளர் புகார்
மாவட்ட தேர்தல் அதிகாரி மீது உதவி தேர்தல் செலவின பார்வையாளர் புகார்
மாவட்ட தேர்தல் அதிகாரி மீது உதவி தேர்தல் செலவின பார்வையாளர் புகார்
ADDED : ஏப் 11, 2024 05:35 PM
ஊட்டி: மாவட்ட தேர்தல் அதிகாரி மீது, உதவி தேர்தல் செலவின பார்வையாளர் மாநில தேர்தல் கமிஷனுக்கு அளித்த புகாரால் சர்ச்சை எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சம், 95 லட்சம் ரூபாய் வரை செலவிடலாம் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வேட்பாளரின் தேர்தல் செலவின கணக்குகளை பார்வையிடுவதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி லோக்சபாவில் தேர்தல் செலவின பார்வையாளராக ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக கிரண் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக சந்தீப் குமார் மிஸ்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தல் பிரிவில் உதவி தேர்தல் செலவின பார்வையாளராக சரவணன் பணிபுரிந்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் வாகன செலவு, பொது கூட்டத்திற்கு மேடை அமைத்தல், பத்திரிகை விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் குறித்து தேர்தல் உதவி செலவின பார்வையாளர்கள் குறிப்பெடுத்து பதிவேட்டில் பதிவு செய்து தேர்தல் செலவின பார்வையாளருக்கு தெரிவிக்கின்றனர்.
நீலகிரி லோக்சபா தொகுதி மாவட்ட தேர்தல் அதிகாரி அருணா, செலவின பதிவேடுகளை வாங்கி பார்வையிடுவதும், ஆவணத்தின் பிரதிகளை ஜெராக்ஸ் எடுத்து தர சொல்லி அங்குள்ள ஊழியர்களை அடிக்கடி டார்ச்சர் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து உதவி தேர்தல் செலவின பார்வையாளர் சரவணன் மாநில தேர்தல் கமிஷனுக்கு, மாவட்ட தேர்தல் அதிகாரி மீது புகார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சரவணன் கூறுகையில், '' நீலகிரி லோக்சபாவுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியாக உள்ள அருணா, வேட்பாளர்களின் செலவின பதிவேடுகளை அடிக்கடி பார்வையிடுவதும், கேம்ப் ஆபீசுக்கு எடுத்து வர சொல்வதும், ஜெராக்ஸ் பிரதிகளை எடுத்து தர சொல்லி டார்ச்சர் செய்கிறார். குறிப்பாக, தி.மு.க., வேட்பாளர் ராஜாவின் தேர்தல் செலவினங்கள் குறித்து ஜெராக்ஸ் எடுத்து தர சொல்லி நிர்பந்திக்கிறார். எதுவாக இருந்தாலும் தேர்தல் செலவின பார்வையாளர்களுக்குதான் தகவல்களை தெரிவிக்க வேண்டிய சூழ்நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி அருணா கேட்டு டார்ச்சர் செய்கிறார். உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாநில தேர்தல் கமிஷனுக்கு புகார் மனு அனுப்பியுள்ளேன்.'' என்றார்.
தேர்தல் அதிகாரி விளக்கம்
மாவட்ட தேர்தல் அதிகாரி அருணா கூறுகையில், ''தேர்தல் செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தல் படி தான் அங்கு சென்று பார்வையிட்டேன். வேட்பாளர்களின் செலவினங்களை பார்வையிட்ட போது, பா.ஜ., அதிமுக வேட்பாளர்களின் செலவினங்கள் சரியாக இல்லை என்றனர்; அப்படியென்றால், எந்த வேட்பாளரின் செலவினங்கள் இருக்கு என்று கேட்டபோதுதான், தி.மு.க., வேட்பாளர் செலவின பட்டியல் தயாராக உள்ளது என்று தெரிவித்தனர். எனவேதான் அதை ஆய்வு செய்தேன்; இதில், உள்நோக்கம் ஏதும் இல்லை. தேர்தல் கமிஷன் விதிகள் படி தான் அனைத்து பணிகளும் முறையாக நடந்து வருகிறது'' என்றார்.

