/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை பணியில் இருந்து நிறுத்துவதாக புகார்?
/
தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை பணியில் இருந்து நிறுத்துவதாக புகார்?
தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை பணியில் இருந்து நிறுத்துவதாக புகார்?
தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை பணியில் இருந்து நிறுத்துவதாக புகார்?
ADDED : நவ 21, 2024 09:04 PM
குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில், அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தற்காலிக டிரைவர்கள்; கண்டக்டர்களை பணியில் இருந்து நிறுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
மாநிலம் முழுவதும் கடந்த ஜன., மாதம் அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். அப்போது, அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்க தற்காலிகமாக டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
இதில், நீலகிரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் கிளைகளில், 520 பேர் வரை பணியில் அமர்த்தபட்டனர். தொடர்ந்து, குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பணியாற்றி வந்த நிலையில், இவர்களை பணியிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் நிறுத்துவதாக டிரைவர், கண்டக்டர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் சிலர் கூறுகையில்,''அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலை நிறுத்தம் அறிவித்தபோது, தற்காலிகமாக பணியில் சேருபவர்களுக்கு பணி பாதுகாப்புக்கு தமிழக முதல்வர் உறுதி அளித்திருந்தார். இதன் பேரில், மினி பஸ்களில் பணியாற்றி வந்த பலரும், அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக பணிகளில் சேர்ந்தனர். தற்போது இவர்களில் பணிகளில் இருந்து நிறுத்தி, புதிய நபர்களை சேர்க்கும் பணியில் போக்குவரத்து கழகங்கள் ஈடுபட்டுள்ளன.
இதுவரை, 350 பேர் பணியில் இருந்து திடீரென நிறுத்தப்பட்டுளளனர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இவர்களின் லைசன்ஸ் திருப்பி வழங்காமல் உள்ளதால், மீண்டும் மினி பஸ்களில் பணி கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது பணி புரியும் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு தொடர்ந்து பணி புரிய வாய்ப்புகள் வழங்க வேண்டும்,'' என்றனர்.
நீலகிரி மாவட்ட அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் முரளி கூறுகையில்,''வேலை வாய்ப்புக்காக, கோவையில் தான் புதிய நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இங்கு இது வரை யாரையும் நிறுத்தவில்லை. சுழற்சி அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது; 180 நாட்களுக்கு பிறகு அடுத்த ஆண்டில் அவர்களுக்கு பணி வழங்கப்படும், தற்போது, நீலகிரியில் நிரந்தர பணிக்கு ஜி.ஓ., எதுவும் வரவில்லை. ஒரு வேளை அந்த ஜி.ஓ., வந்தால் அதிலும் இவர்கள் விண்ணப்பித்து சேரலாம்,'' என்றார்.