/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓட்டுச் சாவடிகள் மறு சீரமைப்பு கட்சியினருடன் ஆலோசனை
/
ஓட்டுச் சாவடிகள் மறு சீரமைப்பு கட்சியினருடன் ஆலோசனை
ஓட்டுச் சாவடிகள் மறு சீரமைப்பு கட்சியினருடன் ஆலோசனை
ஓட்டுச் சாவடிகள் மறு சீரமைப்பு கட்சியினருடன் ஆலோசனை
ADDED : மார் 07, 2024 11:28 AM

சூலுார், மார்ச் 8- -
சூலுார் சட்டசபை தொகுதியில் ஓட்டுச் சாவடிகளை மறு சீரமைப்பது குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் பிரிவு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
லோக்சபா தேர்தல் தேதி விரைவில் வெளியாக உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. ஆயிரத்து, 500 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டு சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடக்கின்றன.
தேர்தலுக்காக, சூலுார் சட்டசபை தொகுதியில், 329 ஓட்டு சாவடிகள்அமைக்கப்பட உள்ளது. பெயர்கள் சேர்க்க நடந்த சிறப்பு முகாம்கள் மற்றும் ஆன்லைன் வாயிலாக வந்த விண்ணப்பங்களால், சில ஓட்டு சாவடிகளில், ஆயிரத்து, 500 க்கும் அதிகமான வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சியில் உள்ள ஒரு வார்டில், ஆயிரத்து, 600 வாக்காளர்களும், பீடம்பள்ளி, பட்டணம் ஊராட்சியில் தலா ஒரு ஓட்டு சாவடியில், அதிக வாக்காளர்கள் இருப்பதை அடுத்து, கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சூலுார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
உதவி வாக்காளர் பதிவு அலுவலரான தாசில்தார் தனசேகர் தலைமை வகித்து பேசுகையில், 1,500 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள ஓட்டு சாவடிகளில் வாக்காளர்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு, கூடுதலாக அமைக்கப்படும் ஓட்டு சாவடிகளில் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்படும். பழுதடைந்த ஓட்டுச் சாவடிகள் வேறு கட்டடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
பா.ஜ., வினர் பேசுகையில்,' இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்க வேண்டும். காங்கயம்பாளையம், காடாம்பாடி பகுதியில் உள்ள வயது முதிர்ந்த வாக்காளர்கள் ஓட்டளிக்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்' என்றனர்.
முத்துக்கவுண்டன் புதூரில் உள்ள ஓட்டு சாவடியில் இடப்பற்றாக்குறை உள்ளதால், சமுதாய நலக் கூடத்துக்கு மாற்ற வேண்டும், என, வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

