/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலையில் தொடரும் மழை; மரங்கள் விழுந்து பாதிப்பு
/
மலையில் தொடரும் மழை; மரங்கள் விழுந்து பாதிப்பு
ADDED : நவ 03, 2024 10:25 PM

குன்னுார் ; குன்னுாரில் கொட்டி தீர்த்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டதுடன், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னுார் சுற்றப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி வரையில், பர்லியார், 12.5 செ.மீ; குன்னுார் டவுன், 10.5 செ.மீ., மழை அளவு பதிவானது.
பேரட்டி பாரத் நகரில், வீட்டின் மீது மண் சரிந்ததில், ஜெபமாலை மேரி,68, என்பவர் காயமடைந்தார். மீட்கப்பட்ட இவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதே பகுதியில் பாறையுடன் மண்சரிவு ஏற்பட்டதில் கார் சேதமடைந்தது. குன்னுார் கிருஷ்ணாபுரம் ஆற்றோர சாலை துண்டிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து போலீசார் பேரிகாட் வைத்து தடுப்பு ஏற்படுத்தினர்.
குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில், காந்திபுரம், மரப்பாலம் அருகே மரங்கள் விழுந்துடன், குரும்பாடியில் மரத்துடன் மண் சரிவும் ஏற்பட்டது. தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலை துறையினர், போலீசார் வந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், இரவு, 10:00 மணியில் இருந்து மலை பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன. எனினும், சில பஸ்கள் உட்பட வாகனங்களில் சென்றவர்கள், 2 மணி நேரம் வரை காத்திருந்து சென்றனர்.
மேட்டுப்பாளையம் சாலை இந்திரா நகர், மரப்பாலம், குரும்பாடி, பந்துமை, சப்ளை டிப்போ உட்பட, 8 இடங்களில் மரங்கள் விழுந்தன. பர்லியாரில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விரிவாக்க பணி நடந்து வரும் இடத்தில் மண்ணரிப்பு ஏற்பட்டு மீண்டும் ஊராட்சி பள்ளி வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியது.
இதே போல, ஸ்டேன்ஸ் பள்ளி அருகில் சமீபத்தில், 90 டிகிரியில் அமைத்த தடுப்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வருகிறது.
பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னுார் சப்-கலெக்டர் சங்கீதா உட்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.