/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேவாலாவில் கைதான ஒப்பந்ததாரர்களுக்கு சிறை; கோவை மத்திய சிறையில் அடைப்பு
/
தேவாலாவில் கைதான ஒப்பந்ததாரர்களுக்கு சிறை; கோவை மத்திய சிறையில் அடைப்பு
தேவாலாவில் கைதான ஒப்பந்ததாரர்களுக்கு சிறை; கோவை மத்திய சிறையில் அடைப்பு
தேவாலாவில் கைதான ஒப்பந்ததாரர்களுக்கு சிறை; கோவை மத்திய சிறையில் அடைப்பு
ADDED : செப் 15, 2025 08:50 PM
பந்தலுார்; கூடலுார் தேவாலாவில், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்கள், இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பந்தலுார் சேரம்பாடியை சேர்ந்த ஒப்பந்ததாரர் ராயின் என்பவருக்கு, சொந்தமான தார் கலவை ஆலை தேவாலாவில் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் அதன், பாதுகாப்பு சுவர் இடிந்து, சில குடியிருப்புகள் சேதமடைந்தது. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து ஆலைக்கு அரசு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
இதனை எதிர்த்து, ஒப்பந்ததாரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், 'ஆர்.டி.ஓ., குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு நடத்தி இரண்டு வாரத்தில் புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இடிந்த சுவற்றின் இடிபாடுகளை அகற்ற, ஆலையை இரண்டு நாட்கள், திறந்து விட்டு பணி முடிந்தபின், சீல் வைக்க வேண்டும்,' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உத்தரவுப்படி, 13ம் தேதி, அரசு அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் ஆலையின் 'சீல்' அகற்றப்பட்டது. அங்கிருந்து வாகனங்கள் வெளியே எடுத்தபின், ஆலையில் உள்ள பொருட்களை கண்காணிக்கும் வகையில், நகராட்சி சார்பில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தேவாலா போலீசில், 'அரசு அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தனர்' என, புகார் அளித்தனர்.
தேவாலா போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம், ஒப்பந்ததாரர்கள் ராயின், 69, சக்கீர், 49, ஆகியோரை கைது செய்து, கூடலுார் மாஜிஸ்திரேட் சரவணக்குமார் முன் ஆஜர்படுத்தினர்.
அவர் உத்தரவுப்படி, ஒப்பந்ததாரர் இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.