/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் மார்க்கெட் கடை இடிப்பு விவகாரம் வியாபாரிகளின் தகவல் 'பயோ மெட்ரிக்' முறையில் பதிவு
/
குன்னுார் மார்க்கெட் கடை இடிப்பு விவகாரம் வியாபாரிகளின் தகவல் 'பயோ மெட்ரிக்' முறையில் பதிவு
குன்னுார் மார்க்கெட் கடை இடிப்பு விவகாரம் வியாபாரிகளின் தகவல் 'பயோ மெட்ரிக்' முறையில் பதிவு
குன்னுார் மார்க்கெட் கடை இடிப்பு விவகாரம் வியாபாரிகளின் தகவல் 'பயோ மெட்ரிக்' முறையில் பதிவு
ADDED : டிச 09, 2024 05:32 AM

குன்னுார் : குன்னுார் மார்க்கெட் கடைகள் இடித்து கட்டும் முடிவை தொடர்ந்து, வியாபாரிகள் குறித்த தகவல்களை 'பயோ மெட்ரிக்' முறையில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.
குன்னுார் நகராட்சி மார்க்கெட்டில், 800க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை இடித்து, 41.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'பார்க்கிங்' வசதியுடன், 678 கடைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
கடை வியாபாரிகளுக்கு, தற்காலிக கடைகள் வைக்க நகராட்சி சார்பில், 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
அதில், உழவர் சந்தை அருகே உர மேலாண்மை மையம் அமைத்த இடத்தில் தற்காலிக காய்கறி கடைகள் கொண்டு வர நகராட்சி திட்டமிட்டுள்ளது. இதேபோல, ஆற்றோர காலி பகுதி, ஆட்டோ ஸ்டாண்ட், அம்மா மருந்தகம் பார்க்கிங் இடங்களில் கடைகள் வைக்க ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இறைச்சி கடைகளுக்கு மாற்று இடம் வழங்குவதில் சிக்கல் உள்ளது.
இந்நிலையில், நகராட்சி கமிஷனர் இளம்பரிதி உத்தரவின் பேரில், நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் சையது இப்ராகிம், வனஜா; 'பயோ மெட்ரிக்' கம்பெனி ஊழியர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் மார்க்கெட்டில் உள்ள கடை வியாபாரிகளின் தகவல்களை, 'பயோ மெட்ரிக்' முறையில் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயிரம்குடும்பங்களுக்கு பாதிப்பு
குன்னுார் அனைத்து வணிகர்கள் சங்க செயலாளர லியாகத் அலி கூறுகையில்,''கொரோனா பாதிப்புக்கு பிறகு கடைக்காரர்களுக்கு, 2022ல் பல மடங்கு வாடகை உயர்த்தப்பட்டது. நிலுவை தொகை, 90 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகளின் ஜீவாதாரமான மார்க்கெட் கடைகளை, 41.50 கோடி ரூபாய்க்கு புதிய திட்டம் போடப்பட்டு பணிகள் நடக்கிறது.
ஊட்டி மார்க்கெட் பகுதியை இடித்து ஓராண்டாகியும், பில்லர் வரை மட்டுமே பணிகள் நடந்துள்ளது. ' தற்காலிகமாக இரண்டு ஆண்டுகளுக்கு திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும்,' என, வலியுறுத்தி, கமிஷனர், தலைவர் உட்பட அனைத்து கவுன்சிலர்களுக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.