/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் திடீர் போராட்டம் உறுப்பினர்கள் பாதிப்பு: மாற்று பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை
/
கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் திடீர் போராட்டம் உறுப்பினர்கள் பாதிப்பு: மாற்று பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை
கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் திடீர் போராட்டம் உறுப்பினர்கள் பாதிப்பு: மாற்று பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை
கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் திடீர் போராட்டம் உறுப்பினர்கள் பாதிப்பு: மாற்று பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை
ADDED : நவ 14, 2024 05:21 AM
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், 44 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், வங்கிகள் செயல்படவில்லை.
நீலகிரியில், ஊட்டி, குன்னுார் ,கோத்தகிரி, கூடலுார் மற்றும் பந்தலுார் ஆகிய தாலுகா பகுதிகளில், 77 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. வங்கி செயலாளர்கள் தலைமையில் செயல்பட்டு வரும் சங்கங்களில், 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அதில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், சிறு விவசாயிகளுக்கு பயிர் கடன், நகைக்கடன், உரக்கடன், கறவை மாட்டு கடன், உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது. சில கூட்டுறவு சங்கத்தின் கீழ், ரேஷன் கடைகள் செயல்படுகிறது.
இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்தி, அங்கு உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு சிறப்பான சேவையை வழங்க, கூட்டுறவு துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதை தொடர்ந்து, 21 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்து, நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் உத்தரவிட்டுள்ளார்.
வங்கி செயலாளர்கள் எதிர்ப்பு
இதற்கு, தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து, 'பணியிட மாறுதலை ரத்து செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தி உள்ளது. பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வு ஏற்படவில்லை.
இந்நிலையில், நேற்று, 44 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், வங்கிகள் செயல்படவில்லை. மீதமுள்ள, 33 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வழக்கம் போல் செயல்பட்டன. மேலும், கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள சில ரேஷன் கடைகள் செயல்படவில்லை. இதனால், வங்கி உறுப்பினர்கள்; ரேஷன் பொருட்கள் வாங்க சென்ற மக்கள் பாதிக்கப்பட்டனர்.
பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை
நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் கூறியதாவது:
மாவட்டத்தில் 77 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்படுகிறது. இதில், 21 சங்க செயலாளர்களை பணியிட மாற்றம் செய்துள்ளோம். அதில், 15 செயலாளர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்ட சங்கத்தில் பணியில் சேரவில்லை.
முறையாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக இருந்தால், 14 நாட்களுக்கு முன்பு அனுமதி கடிதம் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது சட்டப்படி தவறு. இதனால், மாற்று பணியாளர்களை நியமித்து வங்கி, ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், 'விவசாயிகளுக்கு வழங்கிய பயிர் கடனை ஆண்டுதோறும் புதுப்பித்தல்; போலி கணக்கு துவக்கி கடன் பெற்றது,' போன்ற குளறுபடி செயல்களில் சில வங்கி செயலாளர்கள் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. உரிய விசாரணை நடந்து வருகிறது. மற்ற விபரங்கள் பின்பு தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.