/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊராட்சி அலுவலகத்தை திறக்க விடாமல் கவுன்சிலர்கள் போராட்டம்
/
ஊராட்சி அலுவலகத்தை திறக்க விடாமல் கவுன்சிலர்கள் போராட்டம்
ஊராட்சி அலுவலகத்தை திறக்க விடாமல் கவுன்சிலர்கள் போராட்டம்
ஊராட்சி அலுவலகத்தை திறக்க விடாமல் கவுன்சிலர்கள் போராட்டம்
ADDED : மார் 07, 2024 11:32 AM
அன்னுார்:நாரணாபுரம் ஊராட்சி அலுவலகத்தை திறக்க விடாமல் கவுன்சிலர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்தினர்.
நாரணாபுரம் ஊராட்சித் தலைவராக ஈஸ்வரியும், துணைத் தலைவராக பழனிச்சாமியும் உள்ளனர். ஒன்பது வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஊராட்சியில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் கூறி வார்டு உறுப்பினர்கள் சுமதி, ராஜாமணி, பழனிச்சாமி ஆகிய மூவரும் பொதுமக்கள் சிலரும் சேர்ந்து நேற்று காலை ஊராட்சி அலுவலகத்திற்கு முன்பு கோஷங்கள் எழுப்பினர்.
ஊராட்சி அலுவலகத்தை திறக்க ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வந்தனர். அப்போது ''ஊராட்சி அலுவலகத்தை திறக்க அனுமதிக்க மாட்டோம். தலைவர் மற்றும் துணைத் தலைவர் வந்து புகார்களுக்கு உரிய விளக்கம் அளித்தால் மட்டுமே திறக்க விடுவோம்,' என்று கூறினர்.
இதையடுத்து ஊராட்சி செயலர், ஒன்றிய அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். மாலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் ஊராட்சி அலுவலகம் வந்தனர்.
அதிகாரிகளிடம் கவுன்சிலர்கள், 'ஊராட்சியில் முறைகேடால் பல லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த வளர்ச்சி பணியும் செய்யாமல் ஊராட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கிறது,' என்று புகார் தெரிவித்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் பேசுகையில், எந்த புகாராக இருந்தாலும் எழுத்துப்பூர்வமாக தர வேண்டும். ஊராட்சி அலுவலகத்தை திறக்க கூடாது என்று கூறி தடை செய்வது கடும் குற்றம். எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று தெரிவித்தார். இதையடுத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

