/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகராட்சி குப்பை எடை பார்ப்பதில் முறைகேடு கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டம்
/
நகராட்சி குப்பை எடை பார்ப்பதில் முறைகேடு கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டம்
நகராட்சி குப்பை எடை பார்ப்பதில் முறைகேடு கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டம்
நகராட்சி குப்பை எடை பார்ப்பதில் முறைகேடு கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : டிச 24, 2024 10:38 PM
கூடலுார்; கூடலுார் நகராட்சி கூட்டம் தலைவர் பரிமளா தலைமையில் நடந்தது. கமிஷனர் சுவீதாஸ்ரீ முன்னிலை வகித்தார்.
அதில், நகரில் குப்பை அகற்றும் பணியில், தனியாரின் ஒப்பந்த காலம் முடியும் நிலையில், ஒப்பந்தத்தை அதே நிறுவனத்துக்கு நீடிக்க அனுமதி கோரும் தீர்மானம் குறித்து கேட்கப்பட்டது.
உஸ்மான்: குப்பை எடை பார்ப்பதில் தொடர்ந்து முறைகேடு நடந்து வருகிறது. நகராட்சி வருமானத்தில், 3.6 கோடி ரூபாய் குப்பை அகற்றும் ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டி உள்ளது.
அனுப்கான்: தினமும் சராசரியாக, 16 டன் குப்பை அகற்றுவதாக தெரிவிக்கின்றனர். ஆனால், அதிகாரிகள் ஆய்வில், தினமும், 4 டன் வரை குறைவாக குப்பை வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை நீட்டிக்க கூடாது.
தலைவர்: தினமும் எடையை பதிவு செய்கின்றனர். முன்பு நடந்ததை பேச வேண்டாம் இடையில் மாற்றம் வந்துள்ளது. இப்பிரச்னை தொடர்பாக அப்புறம் பேசி கொள்ளலாம்.
அதனை ஏற்க மறுத்த சில கவுன்சிலர்கள், 'ஒப்பந்தத்தை நீட்டிக்க கூடாது. முறைகேடு தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தி, தலைவர் மேஜை அருகே சென்று, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், 'குப்பை அகற்றும் பணியை தொடர்ந்து வழங்குவது குறித்து, கவுன்சிலர்களின் ஆதரவு, எதிர்ப்பு அடிப்படையில் முடிவு செய்யப்படும்,' என, தலைவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, ஆதரவாக, 10 கவுன்சிலர்கள் தலைவரிடம் கடிதம் அளித்தனர். மற்ற, 9 கவுன்சிலர்கள் எதிர்ப்பை பதிவு செய்து, 'ஒப்பந்தத்தை நீடிக்க கூடாது' என, வலியுறுத்தி மன்ற அறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரவு, 11:00 மணிவரை போராட்டம் தொடர்ந்தது. தலைவர் மற்றும் கமிஷனர் மன்ற அறையில் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில், பிரச்னை தொடர்பாக முடிவு செய்ய, கூட்டம் முடிந்து சென்ற மற்ற கவுன்சிலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில், நான்கு கவுன்சிலர்கள் வந்தனர்.
அவர்கள் உட்பட, 13 கவுன்சிலர்கள் ஆதரவுடன், 'குப்பை அகற்றும் பணியில் முறைகேட்டில் ஈடுபட்ட, தனியார் நிறுவனத்திற்கு மீண்டும் குப்பை அகற்றும் பணி வழங்க கூடாது,' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரவு, 11:30 மணிக்கு கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.