
பாக்கு திருடிய இருவர் கைது
மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, 37. இவர் மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் இரண்டாம் பாலம் அருகில் தனி நபருக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் பாக்குதோப்பை கடந்த மூன்று வருடங்களாக குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
பாக்கு தோப்பில் அவ்வப்போது பாக்குகள் திருடு போய் உள்ளது. இதையடுத்து மாரிமுத்து தோப்பில் தங்கி இருந்து, கண்காணித்து வந்தார்.
இதனிடையே தோட்டத்திற்கு பின்புறம் வழியாக இரண்டு நபர்கள் வந்தனர். அவர்களை மறைந்து இருந்து மாரிமுத்து, கண்காணித்த போது இரண்டு நபர்களும், மரங்களில் இருந்த பாக்குகளை பிடுங்கி இரண்டு சாக்கு பையில் போட்டு கட்டியுள்ளனர்.
மாரிமுத்து இருவரையும் துரத்தி பிடித்து, விசாரிக்க அவர்கள் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார், 33, மற்றும் கார்த்திக், 26, என தெரியவந்தது.
மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் பாக்கு திருடிய தினேஷ்குமார், கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பைக் மீது கார் மோதி தந்தை, மகன் பலி
கோவை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில், தந்தையும், மகனும் உயிரிழந்தனர். கோவை மாவட்டம், கண்ணம்பாளையம் பேரூராட்சி, அமர் ஜோதி நகரை சேர்ந்தவர் பிரபாகரன், 39. ஐ.டி., கம்பெனி ஊழியர். இவர் தனது பைக்கில் தந்தை முத்துசாமி, 61 வுடன் பைக்கில் நேற்று முன்தினம் மதியம், அவிநாசி ரோட்டில் கருமத்தம்பட்டி நோக்கி சென்றார்.
தென்னம் பாளையம் அருகே உள்ள வே - பிரிட்ஜ் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார், பைக் மீது மோதியது. இதில், முத்துசாமியும், பிரபாகரனும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பினர். செல்லும் வழியில் முத்துசாமி இறந்தார்.
அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரபாகரன், அங்கிருந்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து காரை ஓட்டி வந்த ஸ்ரீ ஆதீஷ் மீது சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
அனுமதியின்றி மது விற்ற பார் ஊழியர் கைது
கோவில்பாளையம் அருகே வெள்ளானைப்பட்டியில், டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் காலை எஸ்.ஐ. குணசேகரன் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது விதிமுறைகளை மீறி காலை 10:30 மணிக்கு பாரில் வைத்து மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூரை சேர்ந்த ரசாங்கு, 52, என்பவர் பிடிபட்டார். அவரிடம் இருந்து 20 குவாட்டர் மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பவானி ஆற்றில் தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் பவானி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை போலீசார் காப்பாற்றினர்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி, 48. கூலி தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி, 42. அண்மையில் நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார்.
இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. மனைவி இறந்த துக்கத்தில் ராமசாமி மன விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதனிடையே மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி அருகே வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த ராமசாமி, அங்குள்ள பவானி ஆற்றில் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இவரை மேட்டுப்பாளையம் லைப் கார்ட்ஸ் பிரிவு போலீசார் ஆற்றில் குதித்து காப்பாற்றி உயிருடன் மீட்டனர். பின் பரிசல் உதவியுடன் கரைக்கு கொண்டு வந்தனர்.
தனியார் கல்லூரி மாணவி பலி
கருமத்தம்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவி விபத்தில் சிக்கி பலியானார்.
திருப்பூரை சேர்ந்த அழகப்பன் மகள் தேவிபாலா, 19. கோவையில் உள்ள தனியார் கல்லூரியில், பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு வந்தார்.
கருமத்தம்பட்டி அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக டிப்போ அருகே வந்தபோது, நிலை தடுமாறிய வாகனம், டிவைடரில் மோதியது. இதில், கீழே விழுந்த மாணவி படுகாயமடைந்தார்.
ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், முதலுதவிக்கு பின், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். --

