/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கறிவேப்பிலைக்கு விலை இல்லை; விவசாயிகள் கவலை
/
கறிவேப்பிலைக்கு விலை இல்லை; விவசாயிகள் கவலை
ADDED : ஜன 25, 2024 12:11 AM

மேட்டுப்பாளையம் : கறிவேப்பிலையின் மகசூல் குறைந்த போதும், விலை கிடைக்காததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் கறிவேப்பிலை விவசாயம் அதிக அளவில் உள்ளது. அதிகபட்சமாக, 2000 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. புதிதாக நாற்று நடவு செய்தால், 6 மாதங்களில் கறிவேப்பிலை அறுவடை செய்யலாம். ஏற்கனவே உள்ள செடியில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். இந்த விவசாயத்தில் ஆண்டு முழுவதும் கறிவேப்பிலையை அறுவடை செய்யலாம். பனி காலத்தில் மட்டும், மகசூல் மிகவும் குறைந்து விடும். அதனால் டிசம்பர், ஜனவரி மாதங்களில் அறுவடை செய்யாத வகையில், விவசாயிகள் கறிவேப்பிலையை வளர்ப்பர். தற்போது அறுவடை செய்யும், கறிவேப்பிலைக்கு, போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து கறிவேப்பிலை வியாபாரி நாகராஜ் கூறியதாவது:
காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய பகுதிகளில் பயிர் செய்துள்ள செங்காம்பு கறிவேப்பிலை மணமும், சுவையும் நிறைந்திருக்கும். அதனால் இந்த இலைக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. தினமும் இப்பகுதிகளில் அறுவடை செய்யும், 50 டன் கறிவேப்பிலை தமிழகம் மற்றும் கேரள மாநிலத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் பெய்த கனமழையாலும், தற்போது பனிக்காலம் என்பதாலும், கறிவேப்பிலை விளைச்சல் குறைவாக உள்ளது. அதனால் பொது மக்களின் அன்றாட தேவைகளுக்கும், திருமணங்கள், சுப காரியங்கள், பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு தேவையான கறிவேப்பிலையை, ஆந்திராவில் இருந்து வாங்கி வருகிறோம். ஒரு கிலோ, 25 லிருந்து, 30 ரூபாய் வரை விலைக்கு வாங்குகிறோம்.
காரமடை பகுதியில் ஒரு சில பகுதியில், அறுவடை செய்யும் இலைக்கும், இதே விலை தான் கொடுக்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் நான்காவது வாரம், மார்ச் மாதத்தில் இருந்து, சிறுமுகை, காரமடை பகுதியில் கறிவேப்பிலை அறுவடை துவங்கும். வருகிற மாதங்கள் சுபகாரியங்கள் நடைபெற உள்ளதால், விலை உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வியாபாரி கூறினார்.