/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பல்வேறு இடங்களில் மரம் விழுந்து பாதிப்பு
/
பல்வேறு இடங்களில் மரம் விழுந்து பாதிப்பு
ADDED : ஜூலை 27, 2025 09:33 PM
ஊட்டி; நீலகிரியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில், ஊட்டி, குந்தா, கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுகா பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மழைக்கு ஆங்காங்கே மரங்கள் விழுந்தும், லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. காற்றுடன் பெய்யும் மழையால் கடுங் குளிர் நிலவுகிறது.
அதிகாலையில் கேரட் தோட்டம், மலை காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதுவரை பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை.அந்தந்த பகுதியில் உள்ள வருவாய் துறையினர் தங்கள் பகுதிகளில் பேரிடர் அபாய பகுதிகளில் குடியிருந்து வரும் மக்களை கண்காணித்து வருகின்றனர். அதில், 'குடியிருக்க முடியாத இடங்களில் உள்ளவர்கள் பாதுகாப்புக் கருதி அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கலாம்,' என, அறிவுறுத்தி உள்ளது.
ஊட்டி -மேல் கவ்வட்டி சாலையில் பெரிய பாறை விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை தீயணைப்பு மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்று பாறையை உடைத்து அகற்றினர்.
அதேபோல, மேல்கவ்வட்டி, கிண்ணக்கொரை, சூட்டிங் மட்டம், பந்தலுார் பெருங்கரை, பகுதிகளில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புறநகர் பகுதிகளில் மேகமூட்டம் தென்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
கூடலுார் கூடலுார் முதுமலை, தேவாலா, நடுவட்டம் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மழையுடன், அவ்வப்போது வீசும் பலத்த காற்றில், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரப்பாலம் உட்பட பல பகுதிகளில் வீடுகளும் சேதமடைந்து வருகிறது. மீட்பு குழுவினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நீலகிரியில் உற்பத்தியாகி முதுமலை புலிகள் காப்பகம் வழியாக, பவானி ஆற்றில் இணையும் மாயாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெப்பக்காடு - மசினகுடி சாலையை இணைக்கும் வனத்துறைக்கு சொந்தமான, சாலை நடுவே உள்ள பாலம் மாயாறு ஆற்று வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
வனத்துறை கூறுகையில், 'ஆற்றில் அதிகரித்து வரும் மழை வெள்ளத்தால், ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆற்று பகுதிக்கு செல்ல வேண்டாம்,' என்றனர்.