/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த தடுப்பணை: சீரமைத்தால் பயன்
/
சேதமடைந்த தடுப்பணை: சீரமைத்தால் பயன்
ADDED : ஜன 07, 2025 11:48 PM

கூடலுார், ; கூடலுாரில் சேதமடைந்த தடுப்பணைகளை சீரமைப்பதால், கோடை காலத்தில் வனவிலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய முடியும்.
கூடலுார் பகுதியில் உற்பத்தியாகும் பாண்டியார் -புன்னம்புழா மற்றும் இதன் கிளை ஆறுகள், நீரோடைகள் வனவிலங்குகளின் குடிநீர் ஆதாரமாக உள்ளன. கோடை காலங்களில், நீர்வரத்து குறைந்து விடும் என்பதால், சிறு ஆறுகள், நீரோடைகள் குறுக்கே தடுப்பணைகள் அமைத்து, கோடையில் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படுகிறது.
இவ்வாறு அமைக்கப்பட்ட பல தடுப்பணைகள் பராமரிப்பின்றி சேதமடைந்தும், மண் நிறைந்தும் இருப்பதால், தண்ணீர் தேங்க முடியாமல் பயனற்ற நிலையில் உள்ளது.
இதனால், அப்பகுதிக்கு கோடையில் தண்ணீர் தேடி வரும் வன விலங்கு குறிப்பாக யானைகள், குடிநீர் கிடைக்காமல் குடியிருப்புக்குள் நுழைவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. யானை -- மனித மோதல் அதிகரிக்கும் வருகிறது.
இதனை தடுக்க, வன பகுதிகளில் சேதமடைந்த தடுப்பணைகளை, முழுமையாக சீரமைக்க வேண்டும். மேலும், வனவிலங்குகள், மேய்ச்சலில் ஈடுபடும் வனப்பகுதிகளில் உள்ள நீரோடை பகுதிகளில் புதிய தடுப்பணைகள் அமைக்க வேண்டும்.
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'கோடையில், வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சேதமடைந்த தடுப்பணைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும், வனப்பகுதிகளில், வனவிலங்குகளில் குடிநீர், உணவு தேவை பூர்த்தி செய்ய, வனத்துறையினர் நீண்ட காலத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம், வனவிலங்குகள் குடியிருப்பு நோக்கி வருவதை எதிர்காலத்தில் தடுக்க முடியும். மனித-யானை மோதலை தவிர்க்க முடியும்,' என்றனர்.