ADDED : செப் 12, 2025 08:07 PM

கூடலுார், ; கூடலுார் நாடுகாணியில் உள்ள ஜீன்பூல் தாவர மையத்தில், சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
கூடலுார் நாடுகாணி அருகே உள்ள ஜீன்பூல் சூழல் சுற்றுலா மையத்தில், ஜிப்லைன், காட்சி கோபுரம், மீனகம், பசுமை குடிகள், அருங்காட்சியகம், பழமையான தாவரங்கள், சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றன. மேலும், சுற்றுலா பயணிகள் மலையேற்றம் செல்லும் வசதியும், தங்குவதற்கான அறைகளும் இங்கு உள்ளது.
சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதன் நுழைவு வாயில், நாடுகாணி நிலம்பூர் சாலையை ஒட்டி அமைந்துள்ளது.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள பகுதியில் நுழைவு கட்டணம் செலுத்தி ஜீன்பூல் சென்று வருகின்றனர்.
நுழைவு வாயிலிலிருந்து, ஜீன்பூல் சந்திப்பு பகுதிக்கு செல்வதற்காக, 1.5 கி.மீ., தார் சாலை அமைத்துள்ளனர். இச்சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் இயக்க சிரமப்பட்டு வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் கூறுகையில்,'சேதமடைந்துள்ள இச்சாலையை, சீரமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் வாகனங்களை இயக்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது,' என்றனர்.