/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் பந்தலுாரில் மீன் பிடிக்கும் நுாதன போராட்டம்
/
சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் பந்தலுாரில் மீன் பிடிக்கும் நுாதன போராட்டம்
சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் பந்தலுாரில் மீன் பிடிக்கும் நுாதன போராட்டம்
சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் பந்தலுாரில் மீன் பிடிக்கும் நுாதன போராட்டம்
ADDED : அக் 21, 2024 06:09 AM

பந்தலுார் : பந்தலுார் நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சாலையில் உள்ள குழிகளில் மீன் பிடிக்கும் நுாதன போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழக - கேரள எல்லையில் உள்ள பந்தலுார் பகுதி வழியாக மூன்று மாநில வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் சாலை சேதமடைந்த காரணத்தால், மழை காலங்களில் குழிகளில் தண்ணீர் நிறைந்து, வாகனங்கள் செல்லும் போது சிரமம் ஏற்படுவதுடன், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி விழுவது தொடர்கிறது.
சாலையை சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் மனுக்கள் கொடுத்த போதும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுகுறித்து கண்டு கொள்ள வில்லை. மேலும், சாலையை சீரமைப்பதாக கூறி நான்கு முறை, நெடுஞ்சாலை துறை மூலம் குழிகளில் பாறை துகள் மற்றும் ஜல்லிக்கற்களை கொட்டி பணியை நிறைவு செய்தனர்.
எனினும், மழை பெய்தால் ஜல்லி கற்கள் மற்றும் பாறை துகள்கள் மழை வெள்ளத்தில், அடித்து செல்லும் நிலையில் குழிகளின் ஆழம் அதிகரித்து வருகிறது. இதனால், கனரக வாகனங்கள் மற்றும் சிறிய கார்கள் இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
இந்நிலையில், சேதமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், சாலையில் உள்ள குழிகளில் மீன் பிடிக்கும் நுாதன போராட்டம், ஏரியா கமிட்டி தலைவர் மணிகண்டன் தலைமையில் நடந்தது.
ஏரியா செயலாளர் ரவிக்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் சி.மணிகண்டன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சாலை நிலை குறித்தும், அதிகாரிகளின் மெத்தன போக்குக் குறித்தும் பேசினர்.
சாலையை சீரமைக்காவிட்டால், 3ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.