/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமான நடைபாதை; 'குடி'க்காமலே போதை! தடுமாறும் மக்களின் தவிப்புக்கு தேவை தீர்வு
/
சேதமான நடைபாதை; 'குடி'க்காமலே போதை! தடுமாறும் மக்களின் தவிப்புக்கு தேவை தீர்வு
சேதமான நடைபாதை; 'குடி'க்காமலே போதை! தடுமாறும் மக்களின் தவிப்புக்கு தேவை தீர்வு
சேதமான நடைபாதை; 'குடி'க்காமலே போதை! தடுமாறும் மக்களின் தவிப்புக்கு தேவை தீர்வு
ADDED : ஆக 20, 2025 09:22 PM

--நிருபர் குழு--
நீலகிரி மாவட்டத்தில் 'ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், நெல்லியாளம்,' என, 5 நகராட்சிகள்; 10 பேரூராட்சி; 35 கிராம ஊராட்சிகளில், 3 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இதை தவிர, வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படுகிறது. இவற்றுக்கான அடிப்படை பணிகளை மேற்கொள்ளும் உள்ளாட்சி அமைப்புகள் மக்களுடன் நேரடியாக தொடர்புடைய அமைப்புகளாக உள்ளன.
மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், பல கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், மக்கள் நடமாட பயன் படுத்தப்படும் நடைபாதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
அவற்றை பல இடங்களில் தரமாக அமைக்காததால், ஓரிரு ஆண்டுகளில், பல நடைபாதையை மக்கள் பயன்படுத்த முடியாமல் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ஆண்டுதோறும், 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், ஊட்டி, குன்னுார் உட்பட பல சுற்றுலா மையங்களில் உள்ள சேதமான நடைபாதைகளில் நடமாட முடியாமல், அவர்கள் கடும் அதிருப்தி அடைந்து செல்ல வேண் டிய சூழ்நிலை தொடர்கிறது.
கூடலுார் கூடலுார் பழைய பஸ் - ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட் இடையே, சாலையோரம் சேதமடைந்த நடைபாதை, 38 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி நடந்தது. நடைபாதையில் அகலம் குறைவாக இருப்பதாக, கூறிவந்த நிலையில், அதனை அகலப்படுத்த நடவடிக்கை இல்லை. பணிகளும் முழுமையாக நிறைவு பெறவில்லை.
ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில், சில பகுதி நடைபாதைகளில், வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மக்கள் நடை பாதையை பயன்படுத்த முடியாமல் சாலையில் நடந்து செல்கின்றனர்.
புளியம் பாறையிலிருந்து ஆத்துார் பகுதிக்கு செல்லும் சிமென்ட் சாலை நடுவே, உள்ள மின்கம்பம் வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை மாற்ற நடவடிக்கை இல்லாததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
தேவர்சோலை, மசினகுடி நகரின் சில இடங்களில் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு வந்து செல்ல வசதியாக, கழிவுநீர் கால்வாயில் மேல்பகுதியை மூடி உள்ளனர். அதன் மேல் சிலர் கடைகளை வைப்பதால் நடப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இப்பகுதிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குன்னுார் குன்னுார் உலிக்கல் பேரூராட்சி ஒன்றாவது வார்டு நேருநகர் பகுதியில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்கு நடைபாதையின் மேற்பகுதியில் கழிவுநீர் ஓடுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட மின் வாரிய அலுவலகம், தபால் அலுவலகம் செல்லும் நடைபாதை வழியாக பழ தோட்டம் மற்றும் அருவங்காடு செல்லும் மக்கள் பள்ளி மாணவர்கள், குழந்தைகள், முதியோர் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இங்கு, 50க்கும் மேற்பட்ட குடும்பங்களும் உள்ளன. நடைபாதையின் அடியில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. இந்த நடைபாதையின் பல இடங்களிலும் குழிகளாக காட்சியளிக்கிறது. இவ்வழியாக செல்லும் முதியவர்கள், குழந்தைகள் தவறி விழுந்து காயமடைகின்றனர். இதனை முழுமையாக சீரமைக்க வேண்டும்.
குன்னுாரில் அரசு மருத்துவமனை, பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், வணிக நிறுவனங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் மவுன்ட் ரோட்டில் விநாயகர் கோவில் எதிரே உள்ள இடத்தில், அமைக்கப்பட்ட கால்வாய் மூடப்படாமல் உள்ளது.
கால்வாயை சீரமைத்து மூட வேண்டும் 20வது வார்டில், 25 குடும்பங்களுக்கு மேல் பயன்படுத்தும் ரேலி காம்பவுண்ட் நடைபாதை சீரமைக்க, ஓரண்டுக்கு முன்பு, நகராட்சி தலைவர், துணை தலைவர், கவுன்சிலர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சீரமைத்து தருவதாக உறுதி அளித்து சென்றனர். இனியும் விடிவு கிடைக்கவில்லை.
பந்தலுார் பந்தலுார் பஜாரில் நெல்லியாளம் நகராட்சி மூலம் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பேரூராட்சியாக இருந்த போது சாலையின் இரண்டு பகுதியிலும், பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதை மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.
நகராட்சியாக மாற்றம் பெற்ற பின்னர், அவை அனைத்தும் அகற்றப்பட்டு, நடைபாதை, கால்வாய் வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்படும் சூழல் உருவாகி உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, கால்வாயுடன் கூடிய நடைபாதை அமைப்பதாக கூறி குறைந்த அளவில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மழைநீர் மற்றும் கழிவுநீர் வழிந்தோட வழியில்லாத சூழல் உள்ளது.
அதேபோல், தேவாலா பஜார் பகுதியில் சில இடங்களில் நடைபாதை பல இடங்களில் இடிந்து உள்ளதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
உப்பட்டி பகுதியில் கால்வாய் மேல்பகுதி மூடப்பட்டு, நடைபாதையாக பயன்படுத்தும் நிலையில், மீன் மற்றும் இறைச்சி கழிவுகள் கால்வாயில் கொட்டப்பட்டு கடும் துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
இதேபோல், ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளான சேரம்பாடி, நெலாக்கோட்டை, பிதர்காடு, அய்யன்கொல்லி பகுதிகளிலும் நடைபாதை வசதிகள் இல்லாமல், பாதசாரிகள் சிரமத்துடன் சாலையோரம் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்பகுதிகளில் நடைபாதை அமைக்க வேண்டும்.

