/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'டான்டீ' தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
/
'டான்டீ' தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ADDED : அக் 29, 2024 08:46 PM

கூடலுார்: அரசு தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், 20 சதவீதம் போனஸ் கேட்டு, 'டான்டீ' அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலுார், குன்னுார், கோத்தகிரி பகுதிகளில், தமிழக அரசுக்கு சொந்தமான அரசு தேயிலை தோட்ட கழகமான, 'டான்டீ' நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலை தோட்டங்கள், தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.
இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, கடந்த ஆண்டு, 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு ஆண்டு தீபாவளியை முன்னிட்டு, அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், தொழிலாளர்களுக்கு தமிழக அரசு, 20 சதவீதம் போனஸ் அறிவித்துள்ளது. ஆனால், 'தமிழக அரசுக்கு சொந்தமான 'டான்டீ' நஷ்டத்தில் இயங்குவதால், அரசு உத்தரவுப்படி, 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்,' என,நிர்வாகம் தெரிவித்தது.
10 சதவீத அறிவிப்பால் அதிருப்தி
அதனை ஏற்க மறுத்த தொழிலாளர்கள், '10 சதவீதம் போனஸ் தொகை தங்கள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டாம்; 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தி வருகின்றனர். தீபாவளிக்கு ஓரிரு நாட்கள் உள்ள நிலையில், அரசு போனஸ் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதனால், அதிருப்தி அடைந்த டான்டீ தொழிலாளர்கள், வேலைக்கு செல்லாமல், டான்டீ அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாண்டியார் டான்டீ தொழிலாளர்கள், சரகங்களில் இருந்து ஊர்வலமாக வந்து, டான்டீ அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில தொழிலாளர்கள் ஆளும் கட்சி கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 சதவீத போனஸ் அறிவிப்பு
தேவால டி.எஸ்.பி., சரவணன், பாண்டியர் டான்டீ கோட்ட மேலாளர் பினு ஆகியோர், 'தொழிலாளர்கள் பிரதிநிதி சந்தித்து, பிரச்னை தொடர்பாக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்படும். எனவே, போராட்டத்தை கைவிடுங்கள்,' என, கூறினர். அதனை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில், நேற்று மாலை, மாநில முதல்வர், 20 சதவீத போன்ஸ் அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.