/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை பாதையில் லாரியில் ஆட்களை ஏற்றி அபாய பயணம்
/
மலை பாதையில் லாரியில் ஆட்களை ஏற்றி அபாய பயணம்
ADDED : ஜன 14, 2025 08:26 PM

ஊட்டி :
'சரக்கு லாரிகளில் தொழிலாளர்களை ஏற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என , வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறி விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யும் மலை காய்கறிகள் தமிழகம் உட்பட பிற மாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மலை காய்கறி தோட்டங்களுக்கு அறுவடை பணிக்கு செல்லும் லாரிகளில் அதிக அளவில் ஆட்களை ஏற்றி செல்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அறுவடை செய்யப்பட்ட கேரட்டை கழுவி நிரப்பும் மூட்டைகள் மீது ஆட்களை அமர வைத்து அபாயகரமாக பயணிப்பதும் அதிகரித்து வருகிறது. நாள்தோறும், காலை , 8:00 மணி முதல் 12:00 மணி வரை ஊட்டி உட்பட புறநகர் பகுதிகளில் மலை காய்கறிகளை ஏற்றிய லாரிகளில் அளவுக்கு அதிகமான ஆட்களை அமர வைத்து பயணிப்பது தொடர்கிறது.
விழிப்புணர்வு ஏற்படுத்தணும்
இத்தகைய லாரிகளை போலீசார் பிடித்தாலும், அபராதம் மட்டும் விதிப்பதால், தொடர்ந்து இதுபோன்று விதிமீறி செல்லும் வாகனங்கள் அதிகரித்து வருகின்றன.
தன்னார்வலர்கள் சிலர் கூறுகையில், 'லாரிகளில் ஆட்கள் ஏற்றி செல்லும் போது போலீசார் லாரியை ஓரங்கட்டி சில மணி நேரம் காக்க வைத்து அனுப்பினால் விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நடவடிக்கை அவர்களின் பாதுகாப்பிற்காக தான் என்பதை உணர்த்தும்,' என்றனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறுகையில்,'' லாரிகள் மீது ஆட்களை ஏற்றி செல்ல கூடாது என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், சிலர் இவ்வாறான விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்காணிப்பு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டும். இத்தகைய வாகனங்களின் மீது போலீசார் நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்படும்,'' என்றார்.