/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அபாய மரங்களால் ஆபத்து; பயணிகள் அச்சம்
/
அபாய மரங்களால் ஆபத்து; பயணிகள் அச்சம்
ADDED : மே 29, 2025 10:53 PM

கோத்தகிரி, ; கோத்தகிரி பஸ் நிலையம் மேல்புறத்தில் அபாய மரங்கள் நிறைந்துள்ளதால், காற்று வீசும் நேரங்களில் மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட, பஸ் நிலையத்தில், உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு சென்று வரும் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. பஸ் நிலையத்திற்குள், ஹோட்டல், ஆவின் பூத், மற்றும் ஏ.டி.எம்., மையம் அமைந்துள்ளன.
நாள்தோறும், பஸ் நிலையத்திற்குள், 100க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சிற்காக காத்திருக்கின்றனர். இதை தவிர, வேறு தேவைகளுக்காக வந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பஸ் நிலையத்தில் மேற்பகுதியில், போதிய வேர்ப்பிடிப்பு இல்லாமல், கற்பூர மரங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. மழையுடன், காற்று வீசும் போது மரங்கள் விழுந்து அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, இரவு நேரத்தில் மரம் விழுந்தது. ஆட்கள் இல்லாததால், மேற்கூரை மட்டும் சேதம் அடைந்தது.
தற்போது, பருவமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கோத்தகிரி பகுதியில் மழையின் தாக்கம் குறைந்திருந்தாலும், காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இதனால், இப்பகுதியில் அச்சத்தில்பயணிகள் அமர வேண்டிய நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், அபாய மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம்.