/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாவரவியல் பூங்காவில் மலர்ந்த 'டிசம்பர் பூக்கள்'
/
தாவரவியல் பூங்காவில் மலர்ந்த 'டிசம்பர் பூக்கள்'
ADDED : டிச 28, 2024 12:17 AM

ஊட்டி ; ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 'டிசம்பர் பூக்கள்' பூத்துள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில்,'குயின் ஆப் சைனா' என்று அழைக்கப்படும்,'பவுலோனியா பார்சினி' மரம் உள்ளது. இந்த மரங்களில் மலர்கள் பூத்து வருவது வழக்கம். இந்த மரம் சீன நாட்டில் அதிக அளவு உள்ளன.
இதனால், இதற்கு 'குயின் ஆப் சைனா' என்ற பெயர் வந்தது. ஆண்டுதோறும், டிச., மாதம் முதல் பிப்., மாதம் வரை இந்த மரம் முழுவதும் மலர்கள் பூத்து குலுங்கும்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள இந்த மரத்தில், இம்மாதம் முதல் வாரத்தில் மலர்கள் பூக்காமல் இருந்தது. மரம் முழுவதும் மொட்டுக்கள் மட்டும் காணப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக உறைபனி பொழிவு இருந்ததால், மலர்கள் பூத்து வருகின்றன. 'டிசம்பர் பூக்கள்' என்று அழைக்கப்படும் இந்த மலர்களை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ரசித்து 'போட்டோ' எடுத்து செல்கின்றனர்.
தோட்டக்கலை துறையினர் கூறுகையில்,'பொதுவாக டிச., பனி பொழிவின் போது புல்வெளி; மலர்கள் காய்ந்து விடும். இந்த சூழ்நிலையில் பனி பாதிப்பை தாங்கும் பவுலோனியா மலர்கள் மட்டும் இந்த கால கட்டத்தில் பூத்து வருவது அரிதான ஒன்றாகும். இந்த மலர்களை அனைவரும் ரசித்து செல்கின்றனர்,' என்றனர்.