/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெலிங்டனில் 206 மரங்கள் வெட்ட முடிவு; மரம் விழுந்து டிரைவர் பலியானதால் நடவடிக்கை
/
வெலிங்டனில் 206 மரங்கள் வெட்ட முடிவு; மரம் விழுந்து டிரைவர் பலியானதால் நடவடிக்கை
வெலிங்டனில் 206 மரங்கள் வெட்ட முடிவு; மரம் விழுந்து டிரைவர் பலியானதால் நடவடிக்கை
வெலிங்டனில் 206 மரங்கள் வெட்ட முடிவு; மரம் விழுந்து டிரைவர் பலியானதால் நடவடிக்கை
ADDED : நவ 07, 2024 08:15 PM

குன்னுார்; குன்னுார் வெலிங்டன் ராணுவ மையம் பகுதியில் கற்பூரமரம் காரின் மீது விழுந்து, டிரைவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, 206 ஆபத்தான மரங்கள் வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குன்னுார் வெலிங்டன் பகுதியில், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர், ராணுவ பயிற்சி கல்லுாரி, டிபன்ஸ் எஸ்டேட் ஸ்டேஷன் கமாண்டிங் அலுவலகம், ராணுவ மருத்துவமனை உட்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.
மழை காலங்களில் இந்த பகுதிகளில் உள்ள ராட்சத மரங்கள் அவ்வப்போது விழுந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இவற்றை அகற்ற மக்கள் பலமுறை வலியுறுத்தியும் தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில், கடந்த, 2ம் தேதி பேரக்ஸ் பகுதியில் ராட்சத மரம் கார் மீது விழுந்ததில், கூர்க்கா கேம்ப் பகுதியை சேர்ந்த டிரைவர் ஜாகிர் உசேன்,43, சம்பவ இடத்திலேயே பலியானார்.
தொடர்ந்து, டிபன்ஸ் எஸ்டேட் நிர்வாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குன்னுார் வனத்துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், வெலிங்டன் முழுவதும், 206 மரங்கள் அபாயகரமாக உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டது. இதன் மதிப்பீடுகள் குறித்தும் வனத்துறையினர் டிபன்ஸ் எஸ்டேட் நிர்வாகத்தினருக்கு சமர்ப்பித்தனர்.
தற்போது, முதற்கட்டமாக மரம் விழுந்த இடத்தில், 4 மரங்கள் உடனடியாக வெட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து மற்ற மரங்கள் வெட்டி அகற்றப்பட உள்ளது.
நான்கு லட்சம் நிவாரணம்
மரம் விழுந்து பலியான ஜாகிர் உசேன் குடும்பத்தினருக்கு, மாநில அரசின் பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து, 4 லட்சம் ரூபாய் நிதி வழங்க மாநில முதல்வர் உத்தரவிட்டார். இந்த தொகை ஜாகிர் உசேன் மனைவி கைருநிஷாவின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

