/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் அரசு கலை கல்லுாரி கட்டுமான பணிக்காக வனப்பகுதியை அழிக்க முடிவு?
/
குன்னுாரில் அரசு கலை கல்லுாரி கட்டுமான பணிக்காக வனப்பகுதியை அழிக்க முடிவு?
குன்னுாரில் அரசு கலை கல்லுாரி கட்டுமான பணிக்காக வனப்பகுதியை அழிக்க முடிவு?
குன்னுாரில் அரசு கலை கல்லுாரி கட்டுமான பணிக்காக வனப்பகுதியை அழிக்க முடிவு?
UPDATED : ஜூன் 12, 2025 07:35 AM
ADDED : ஜூன் 11, 2025 08:41 PM

குன்னூர்; குன்னுார் எடப்பள்ளி பந்துமையில் மரங்கள் மற்றும் இயற்கை வளங்களை அழித்து, அரசு கலை கல்லுாரி அமைக்கும் முயற்சியை தடுக்க, தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு புகார் மனு அனுப்பப்பட்டுஉள்ளது.
குன்னுார் பந்துமை பகுதியில் பல்வேறு வகைகளில், ஆயிரக்கணக்கான மரங்கள் உள்ளன. இங்கு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி செடிகள், அழிவின் பிடியில் உள்ள தவிட்டு பழ செடிகள் உட்பட ஏராளமான மூலிகை செடிகளும் உள்ளன.
நீதிபதிகள் உத்தரவு
அருகிலேயே, நீராதாரப் பகுதியாக உள்ளதால், இங்கு தடுப்பணை கட்டப்பட்டு குன்னுார் நகராட்சி குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட இந்த இடத்தை தேர்வு செய்து, அரசு அதிகாரிகள் காண்பித்தனர். இதனை பார்வையிட்ட நீதிபதிகள், மரங்கள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக, இங்கு கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டாம் என உத்தரவிட்டு சென்றனர்.
இந்நிலையில், இதே இடத்தில் கடந்த, 2021ல், குன்னுார் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சராக இருந்த போது, 'டைடல் பார்க்' கொண்டு வர ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது, எதிர்ப்பு கிளம்பியது. 'குன்னுார் டைடல் பார்க் அமைப்பதில்லை' என அப்போதைய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதி அளித்து சென்றார்.
சமீபத்தில், குன்னுார் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில், அரசு கலை கல்லுாரி துவக்க விழாவில், 'பந்துமை பகுதியில் அரசு கலை கல்லுாரி விரைவில் அமைக்கப்படும்,' என, அரசு கொறடா தெரிவித்தார். இதனையொட்டி, கடந்த, சில நாட்களுக்கு முன்பு, எம்.பி., ராஜா, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உட்பட அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்தனர்.
வேறு பகுதிக்கு மாறுமா?
இந்நிலையில், குன்னுார், கோத்தகிரி பகுதிகளில் ஏற்கனவே கல்லுாரி செயல்பட்டு வரும் நிலையில், குந்தா தாலுகாவிற்கு கல்லுாரியை மாற்ற வலியுறுத்தி, மாவட்ட கலெக்டருக்கு, பேராசிரியர்கள் குழுவினர் உட்பட பல அமைப்புகள் புகார் மனுக்களை அனுப்பி உள்ளன.
எனினும், இங்குள்ள வனப்பகுதியை அழித்து, இங்கு கல்லுாரி அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி சஜீவன் கூறுகையில்,''எடப்பள்ளி கிராமத்தில் ஏற்கனவே ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கும் ஆய்வின் போது, 'மரங்களை வெட்டி இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டாம்,' என, நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.
தொடர்ந்து, 'டைடல் பார்க்' அமைக்க அரசு சாத்திய கூறுகளை ஆய்வு செய்யும் போது, பாரஸ்ட் டேல் குடிநீர் ஆதாரமாக உள்ளதாலும், மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்த நீரூற்றுகள் இங்கு அமைந்துள்ளதால் அந்த திட்டமும் நிறுத்தப்பட்டது. தற்போது, 12 ஏக்கர் பரப்பில் இயற்கை வளங்கள் அழித்து, இங்கு கல்லுாரி பணிகள் மேற்கொண்டால் வனவிலங்குகள் இடம் பெயர்ந்து, குடியிருப்புகளை நோக்கி வந்து, வனவிலங்கு -மனித மோதல் நடக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, அரசு கலை கல்லுாரியை குன்னுார் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படுத்த வேண்டும். அதற்கான வசதிகள் ஏற்படுத்த அங்கு இடம் உள்ளது. இது தொடர்பாக, பிரதமர், மாநில முதல்வர், தேசிய பசுமை தீர்ப்பாய நிர்வாகிகளுக்கு மனுக்கள் அனுப்பி உள்ளோம்,'' என்றார்.