/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆறுகளில் குறைந்து வரும் நீர்வரத்து
/
ஆறுகளில் குறைந்து வரும் நீர்வரத்து
ADDED : மார் 15, 2024 11:20 PM

கூடலுார்:கூடலுார் ஓவேலி பகுதியில் ஆறுகளில், நீர்வரத்து குறைந்து வருவதால் அதனை நம்பியுள்ள மக்கள் மட்டுமின்றி வன விலங்குகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூடலுாரில் பசுமை வனங்கள் நிறைந்த ஓவேலி பகுதியில் உற்பத்தியாகும் பார்வுட், சூண்டி உள்ளிட்ட ஆறுகளில் ஆண்டு முழுவதும் நீர் வரத்து இருக்கும். இதனால், கோடை காலத்தில் இப்பகுதி மக்களுக்கும், வனவிலங்குகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. கோடையில் முதுமலை, நடுவட்டம், கேரள மாநிலம் நிலம்பூர் பகுதிகளில் இருந்து உணவு மற்றும் குடிநீர் தேடி காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்து, தங்கி செல்வது வழக்கம். கடந்த ஆண்டு எதிர்பார்த்த பருவமழை பெய்யாததாலும், நடப்பாண்டு கோடை மழை ஏமாற்றி வருவதாலும் நீரோடைகள் வறண்டு வருவதுடன், முக்கிய ஆறுகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
இதனால் இதனை நம்பி உள்ள இப்பகுதி மக்களுக்கு மட்டுமின்றி வனவிலங்குகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், குடிநீர் தேடி குடியிருப்புக்குள் வரும் வனவிலங்குகளால், மனித-விலங்கு மோதல் அதிகரிக்கும் ஆபத்துள்ளது.
வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், 'ஓவேலி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு, பேரூராட்சி சார்பில் வாகனங்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யவும்; வனப்பகுதிகளில் சிமெண்ட் தொட்டிகள் அமைத்து வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுத்து சென்று உற்றி, வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.

