/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீடு கட்டும் பணியில் தொய்வு; பழங்குடி மக்கள் அவதி
/
வீடு கட்டும் பணியில் தொய்வு; பழங்குடி மக்கள் அவதி
ADDED : ஜன 13, 2024 01:16 AM

பந்தலுார்;பந்தலுார் பாதிரிமூலா பழங்குடி கிராமத்தில் வீடு கட்டும் பணி பாதியில் விடப்பட்டதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாதிரிமூலா பழங்குடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு மூன்று குடும்பத்தினர் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.
இவர்கள் குடியிருந்த வீடுகள் பழுதடைந்த நிலையில், ஊராட்சி மூலம் புதிதாக வீடுகள் கட்டும் பணி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்டது. அதனால் தாங்கள் குடியிருந்த வீடுகளை உடைத்து தற்காலிக குடிசைகளில் வசிக்க துவங்கினர்.
இந்நிலையில், வீடு கட்டும் பணி அடித்தளத்துடன் நின்று போனதால், பாதுகாப்பற்ற குடிசைகளில் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் பரிதாப வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
அதில், சிந்து என்பவரின் குடிசையை இரண்டு முறை யானைகள் சேதம் செய்தன. அதில், ஒட்டுமொத்த குடிசையும் பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் குடிசை அமைத்து, அவரின் குடும்பத்தினர் அச்சத்துடன் குடியிருந்து வருகின்றனர். இதேபோல், கிராமத்திற்கு செல்ல மண் சாலை மற்றும் ஒற்றையடி பாதையை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.
தெருவிளக்கு மற்றும் குடிநீர் வசதி இல்லாத நிலையில், இவர்களின் அடிப்படை தேவைகள் குறித்து வார்டு உறுப்பினர் முதல், மாவட்ட கலெக்டர் வரை பலமுறை புகார் கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர். இந்த கிராமத்தை ஒட்டிய அத்திச்சால் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து பழங்குடியினரின் குறைகளை கேட்டறிந்தார்.
பழங்குடியினர் கூறுகையில்,' அத்திச்சால் கிராமத்துக்கு வந்த கலெக்டர் தங்கள் கிராமத்தை ஆய்வு செய்யாமல் திரும்பினார். அதிகாரிகளும் கூறவில்லை. தங்களுக்கு வேதனையை அளிப்பதாக இருந்தது.
மழை காலம் துவங்குவதற்குள், வீடுகளை தரமான முறையில் கட்டி தரவும், குடிநீர் நடைபாதை மற்றும் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.