ADDED : பிப் 22, 2024 11:26 PM
அன்னுார்;சாலைப் பணியின் போது, நான்கு வாகன போக்குவரத்தை தடை செய்வதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
திருப்பூர் மாவட்டம், கருவலுாரில் இருந்து நரியம்பள்ளி வழியாக, கோவை மாவட்டத்தில், கஞ்சப்பள்ளி, ஊத்துப்பாளையம், அன்னுார், குருக்கிளையம்பாளையம், பொகலுார் வழியாக மேட்டுப்பாளையம் வரை சாலை அமைக்கும் பணி, இரு வாரங்களாக நடந்து வருகிறது.
சாலை அமைக்கும் போது, இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் செல்வதற்கு மட்டும் வழிவிட்டு மீதி பாதையை அடைத்து விடுகின்றனர். இதனால் அரசு, தனியார் பஸ்கள், லாரிகள், டிப்பர் லாரிகள் என எந்த வாகனமும் செல்ல முடிவதில்லை. குறிப்பாக, பஸ்கள் அதிக தொலைவு சுற்றி செல்வதால் கிராமங்களில் இறங்குவோர் திணறுகின்றனர்.
இதுகுறித்து, பொகலுார் மக்கள் கூறுகையில், 'வழக்கமாக, புதிதாக சாலை அமைக்கும் போது ஒரு புறம் மட்டும் அடைத்து, ஒரு வழி பாதையாக வாகனங்களை அனுப்பி, மறுபுறம் சாலை அமைத்து வந்தனர். தற்போது இருபுறமும் அடைத்துள்ளதால், அரசு, தனியார் பஸ்கள் சுற்றி செல்கின்றன. கிராமங்களுக்கு செல்வோர் அதிக தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டி உள்ளது. வழக்கம்போல் ஒரு பாதி மட்டும் அடைத்து விட்டு, மறுபாதியில் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து மாநில நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை' என்றனர்.