/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'தெவ்வ ஹப்பா' பண்டிகை கொண்டாட்டம்; 14 கிராம மக்கள் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்பு
/
'தெவ்வ ஹப்பா' பண்டிகை கொண்டாட்டம்; 14 கிராம மக்கள் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்பு
'தெவ்வ ஹப்பா' பண்டிகை கொண்டாட்டம்; 14 கிராம மக்கள் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்பு
'தெவ்வ ஹப்பா' பண்டிகை கொண்டாட்டம்; 14 கிராம மக்கள் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்பு
ADDED : ஜூலை 20, 2025 10:21 PM

மஞ்சூர்; கீழ்குந்தாவில் படுகரின மக்களின் பாரம்பரிய அறுவடை திருவிழாவான 'தெவ்வ ஹப்பா' கொண்டாடப்பட்டது.
மஞ்சூர் அருகே உள்ள கீழ்குந்தாவில் படுகரின மக்களின் குலதெய்வமான, காடெ ஹெத்தையம்மன் கோவில் உள்ளது. நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் அறுவடை திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில், நடப்பாண்டின் திருவிழா கடந்த, 17ம் தேதி துவங்கியது. இதை தொடர்ந்து விழாவின் முக்கிய அம்சமாக நேற்று 'அரிக்கட்டுதல்' மற்றும் ஹெத்தை அம்மனுக்கு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக ஆண்டுக்கொரு முறை மட்டுமே திறக்கப்படும் 'பனகுடி' கோவில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, பனகுடியில் இருந்து ஹெத்தையம்மனை கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது, குந்தை சீமைக்குட்பட்ட, கீழ்குந்தா, மஞ்சூர், கரியமலை, மட்டகண்டி, துானேரி, பாக்கொரை, எடக்காடு, முக்கிமலை உட்பட, 14 ஊர்களில் இருந்து பாரம்பரிய வெள்ளை உடைகளை உடுத்தி வந்திருந்த  படுகரின மக்கள், கீழ்குந்தா சேலட்டி மைதானத்தில் திரண்டு தரையில் விழுந்து அம்மனை வணங்கினர்.
அரிக்கட்டுதல் நிகழ்ச்சி
இதையடுத்து, ஹெத்தையம்மன் குடியமர்த்தப்பட்டதும் 'அரிக்கட்டுதல்' நிகழ்ச்சி நடந்தது. அதில், பருவம் தவறாமல் மழை பெய்யவும், விவசாயம் செழிக்க வேண்டி புதியதாக விளைந்த கோதுமை, தினை உள்ளிட்ட பயிர்களை அம்மனுக்கு படைத்தனர். இதை தொடர்ந்து, அம்மனுக்கு காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர்.  அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும்,படுகரின மக்களின் நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஜெகநாதன், ஹெத்தையம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ராஜேந்திரன், உறுப்பினர்கள் கென்னடி கிருஷ்ணன், தேவராஜ், தீபக்பரதன், சந்திரன் மற்றும் கீழ்குந்தா ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

