/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்: கோவில்களில் திரண்ட பக்தர்கள் கூட்டம்
/
மலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்: கோவில்களில் திரண்ட பக்தர்கள் கூட்டம்
மலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்: கோவில்களில் திரண்ட பக்தர்கள் கூட்டம்
மலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்: கோவில்களில் திரண்ட பக்தர்கள் கூட்டம்
ADDED : ஆக 28, 2025 12:28 AM

ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான மக்கள் பங்கேற்றனர்.
ஊட்டி இரட்டை பிள்ளையார் கோவிலில், 108 கலச அபிஷேகம் உட்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. மாலையில் சுவாமி திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
பிங்கர் போஸ்ட் பட்பயர் பகுதியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. விநாயகருக்கு அரிசி மாவு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோடப்பமந்து ஆனந்த விநாயகர் கோவில், ஊட்டி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள கற்பக விநாயகர் கோவில், பழைய கோர்ட் வளாகத்தில் உள்ள மகாசக்தி விநாயகர் கோவில், டேவிஸ்டேல் பஞ்சமுக விநாயகர் கோவில், லோயர் பஜார் விட்டோபா கோவில், வண்டிச்சோலை லட்சுமி நரசிம்மர் கோவிலில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது.
512 சிலைகளுக்கு பூஜை இந்து முன்னணி சார்பில், பாம்பே கேசில் பகுதியில், 9 அடி உயர விநாயகர் சிலையும், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் காந்தள் பகுதியில், 8 அடி உயர விநாயகர் சிலையும் விசர்ஜனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது.
சிவசேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டம் முழுவதும், 512 சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. இந்த சிலைகளுக்கு நேற்று முதல், 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கூடலுார் - கூடலுார் விநாயகர் கோவிலில் காலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்து சென்றனர். காலை, 10:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. மசினகுடி விநாயகர் கோவிலில் கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஓவேலி, தேவர்சோலை, நாடுகாணி, கோழிபாலம், நர்த்தகி உள்ளிட்ட பகுதிகளில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.
பந்தலுார் பந்தலுார் அருகே உப்பட்டி ஸ்ரீ செந்துார் முருகன் கோவிலில் நேற்று காலை, 6:00 மணி முதல் சிறப்பு கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு உணவுகள் வைக்கப்பட்டு, அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. சேரம்பாடி விநாயகர் கோவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
குன்னுார் ஜெகதளா கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில், காலை, 6:00 மணி முதல் 7:00 மணி வரை அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து அனைத்து கோவில்களுக்கும் விநாயகர் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, ஹெத்தையம்மன் கோவில் வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக உற்சவ மூர்த்தியை வைத்து பூஜை நடந்தது. வைக்கப்பட்டது. மாலை, 3:00 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் விழா முடிந்தது. மவுன்ட் ரோடு விநாயகர் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில், அருவங்காடு விநாயகர் கோவில்களில் வழிபாடுகள் நடந்தன.
இதேபோல, கோத்தகிரி, மஞ்சூர் உட்பட மாவட்ட முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் கோலாகலமாக நடந்தது.