/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை மாவட்டத்தில் முன்னோருக்கு தர்ப்பணம்; ஆடி அமாவாசை பூஜையில் திரண்ட பக்தர்கள்
/
மலை மாவட்டத்தில் முன்னோருக்கு தர்ப்பணம்; ஆடி அமாவாசை பூஜையில் திரண்ட பக்தர்கள்
மலை மாவட்டத்தில் முன்னோருக்கு தர்ப்பணம்; ஆடி அமாவாசை பூஜையில் திரண்ட பக்தர்கள்
மலை மாவட்டத்தில் முன்னோருக்கு தர்ப்பணம்; ஆடி அமாவாசை பூஜையில் திரண்ட பக்தர்கள்
ADDED : ஜூலை 24, 2025 08:16 PM
ஆடி அமாவாசையை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் திரண்டனர்.
ஆடி அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது என்பது காலகாலமாக தொன்று தொட்டு கடைபிடித்து வரும் வழக்கமாகும். இந்த சடங்கு இறந்த முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அவர்களின் ஆசீர்வாதத்தை பெறும் விதமாகவும் பார்க்கப்படுகிறது.
தர்ப்பணம் செய்வதால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைந்து, குடும்பத்திற்கு நன்மைகள் கிடைக்கும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசையில் நீர் நிலைகளான ஆறு,குளம்,கடல் போன்ற இடங்கள் தேர்வு செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஊட்டியில் மாரியம்மன் கோவில், காந்தள் மூலக்கரசி அம்மன் கோவில், பாம்பே கேசலில் உள்ள முனீஸ்வரன் கோவில், மஞ்சூர் பஜாரில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில், அன்னமலை முருகன் கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள பல கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
அதிகாலையில் தர்ப்பண நிகழ்ச்சி பந்தலுார் அருகே, பிரசித்தி பெற்ற விஷ்ணு கோவில் வளாகத்தில் உள்ள ஆற்றங்கரையில், மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு துவங்கியது.
கோவில் தலைமை குருக்கள் சுதீஷ் தலைமையில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வை நடத்தினார்.
அதில், பந்தலுார் மற்றும் கூடலுார் தாலுகாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலை முதல், ஆற்றங்கரையில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு, திதி கொடுத்து தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து, விஷ்ணு பகவானுக்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.
ஏற்பாடுகளை மேலாளர் சந்தியா, கமிட்டி நிர்வாகிகள் புஷ்கரன், உன்னிகிருஷ்ணன், வினோத் தலைமையிலான குழுவினர் மற்றும் மகளிர் அமைப்பினர் இணைந்து செய்திருந்தனர்.
இதேபோல, முத்துார் பிள்ளை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள நீர்தேக்கத்தில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடந்தது. அதில், திரளான மக்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
-பஞ்சோரா சக்தி முனீஸ்வரன் மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை முதல் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. திரளான மக்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மேலும், மேல் கூடலுார் சந்தை கடை மாரியம்மன் கோவில், மசினகுடி பொக்காபுரம் கோவிலில் நடந்த ஆடி அமாவாசை பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார்.
கோத்தகிரி டானிங்டன் கருமாரியம்மன் மற்றும் வாராஹி அம்மன் கோவில், கடைவீதி மாரியம்மன் கோவிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
-நிருபர் குழு-