/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை வாரிய கல்வி உதவித்தொகை பெறுவதில் ஏமாற்றம்! விகிதாசார அடிப்படையில் திட்டம் வந்தால் பலன்
/
தேயிலை வாரிய கல்வி உதவித்தொகை பெறுவதில் ஏமாற்றம்! விகிதாசார அடிப்படையில் திட்டம் வந்தால் பலன்
தேயிலை வாரிய கல்வி உதவித்தொகை பெறுவதில் ஏமாற்றம்! விகிதாசார அடிப்படையில் திட்டம் வந்தால் பலன்
தேயிலை வாரிய கல்வி உதவித்தொகை பெறுவதில் ஏமாற்றம்! விகிதாசார அடிப்படையில் திட்டம் வந்தால் பலன்
ADDED : நவ 20, 2024 10:04 PM

குன்னுார் : தேயிலை வாரியத்தால் கல்வி உதவித்தொகை விண்ணப்பம் பெறுவது நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கடந்த, 2023-24 -முதல் 2025-26 வரையிலான, 15வது நிதி கமிஷன் சுழற்சியில், 664.09 கோடி ரூபாய் தேயிலை மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டது. இது குறித்து தேயிலை வாரியம் கடந்த அக்., 3ல் அறிவிப்பு வெளியிட்டது.
அதில், 'தோட்ட மேம்பாடு மற்றும் தர மேம்பாடு, தேயிலை ஊக்குவிப்பு மற்றும் சந்தை ஆதரவு; உற்பத்தி செயல் முறைகளை மேம்படுத்த நவீன தொழில் நுட்பங்களை இணைத்தல்; தொழில்துறை புதுமைப்படுத்துதல்; ஆராய்ச்சியில் முதலீடு; கல்வி உதவி தொகை,' உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
சிறு தேயிலை விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையாக, ரூ.8000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. 'இதற்கு விண்ணப்பிக்க கூடுதலாக ஒரு மாதகால அவகாசம் வழங்க வேண்டும்,' என, விவசாயிகள் வலியுறுத்திய நிலையில், கடந்த, 2ம் தேதி விண்ணப்பிக்கும் தேதி நிறுத்தப்பட்டது.
விபரம் அறிந்த விவசாயிகளுக்கு பலன்
நீலகிரியில், 65 ஆயிரம் சிறு விவசாயிகளில், 45 ஆயிரம் பேர் தேயிலை வாரியத்தில் பதிவு செய்துள்ள நிலையில், முழுமையாக விபரங்களை அறிந்த சில விவசாயிகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே விண்ணப்பம் பெறுவது நிறுத்தப்பட்டதால், பெரும்பான்மையான விவசாயிகள், தோட்ட தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை சென்று சேராத நிலை ஏற்பட்டுள்ளது.
சிறு தேயிலை விவசாயிகள் விழிப்புணர்வு மைய அமைப்பாளர் வேணுகோபால் கூறுகையில்,''விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசின் இத்திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.
நாட்டிலேயே நீலகிரியில் தான், சிறு, குறு விவசாயிகள் அதிகம் உள்ளனர். 'இன்கோசர்வ்' அதிகாரி, வாரியத்தின் உறுப்பினராகவும் பதவி வகிக்கின்றார்.
இதனால் இத்திட்டம் விகிதாசார அடிப்படையில், செயல்படுத்த மத்திய அரசுக்கு, 'இன்ட்கோ சர்வ்', தேயிலை வாரியம் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும்.
ஆனால், இதனை செயல்படுத்தாததால் பெரும்பாலான விவசாயிகளின் பிள்ளைகளுக்கு, கல்வி உதவி தொகை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
வருங்காலங்களில் நீலகிரி உட்பட தென்மாநில தேயிலை விவசாயிகளுக்கு, இத்திட்டம் முறையாக சென்று சேர விகிதாசார அடிப்படையில் தொகை ஒதுக்கீடு செய்ய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பரிந்துரைக்க வேண்டும்,'' என்றார்.
தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துகுமார் கூறுகையில்,''நடப்பாண்டின் கல்வி உதவி தொகைக்கு நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் உதவி தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.