தென் மேற்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள...பேரிடர் ஏற்பாடு! பொது மக்கள் தகவல் அளிக்க அவசர எண்கள் அறிவிப்பு
தென் மேற்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள...பேரிடர் ஏற்பாடு! பொது மக்கள் தகவல் அளிக்க அவசர எண்கள் அறிவிப்பு
UPDATED : ஜூன் 28, 2026 04:16 PM
ADDED : ஜூன் 28, 2026 04:00 PM

ஊட்டி : நீலகிரியில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் இடி மற்றும் மின்னல் ஏற்படும் நேரத்தில் உரிய முன்னெச்சரிக்கையுடன் உயிரிழப்புகளைத் தடுத்து பாதுகாப்புடன் இருக்க பொது மக்கள் மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என , அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
அதன்படி , இடி சத்தம் கேட்டவுடன் வெளிப்புற செயல்பாடுகளை உடனே நிறுத்த வேண்டும். உடனடியாக ஒரு பாதுகாப்பான கட்டடம் அல்லது மூடப்பட்ட வாகனத்திற்கு செல்ல வேண்டும். திறந்த பகுதிகளை விட்டு விலக வேண்டும். குழந்தைகள் , முதியோர்கள் , கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். இறுதி இடி முழக்கத்திலிருந்து , 30 நிமிடங்கள் ஆகும் வரை வீட்டிற்குள் இருக்க வேண்டும்.
மேலும் , மரத்தின் அடியில் அல்லது அருகில் நிற்க வேண்டாம். பேருந்து நிறுத்தங்கள் , கொட்டகைகள் , தகரக் கூரை அமைப்புகள் மற்றும் திறந்தவெளி கூடாரங்களை தவிர்க்க வேண்டும். நீர் நிலைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். உலோக வேலிகள் , கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
இடைவெளி அவசியம்
தவிர , தங்குமிடம் கிடைக்காவிட்டால் கால்களை ஒன்றாக வைத்து குனிந்து அமர வேண்டும். தரையை தொடுவதை தவிர்க்கவும். தரையில் மல்லாந்து படுக்காதீர்கள். கைகளை தரையில் வைக்காதீர்கள் , குழுவாக இருந்தால் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். செல்லப் பிராணிகளை வீட்டுக்குள் உலோக சங்கிலியால் கட்டுவதை தவிர்க்கவும்.
கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில் , மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். பேரிடர் நேரிட்டால் உடனே அருகில் உள்ள வருவாய்த் துறையினரை அணுகி தகவல் தெரிவிக்க வேண்டும். என்றார்
