/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சீகூர் யானை வழித்தடத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
/
சீகூர் யானை வழித்தடத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 15, 2025 10:59 PM
கூடலுார்: முதுமலை, சீகூர் யானை வழித்தட பகுதியில், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முதுமலை மசினகுடி சீகூர் யானை வழித்தடத்தில், விதி மீறி கட்டப்பட்ட சுற்றுலா விடுதிகள் உட்பட பிற கட்டடங்கள், ஆக்கிரமிப்பு களை அகற்ற, 2008ல் வக்கீல் யானை ராஜேந்திரன், சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
தொடர்ந்து, 2011ல் யானை வழித்தடத்தில் உள்ள அனுமதி இல்லாத சுற்றுலா விடுதிகள், ஆக்கிரமிப்புகள் அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து காட்டேஜ் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்தது. தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி, 2018, ஆக., மாதம் யானை வழித்தடங்களில் உள்ள, 39 தனியார் விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் 'சீல்' வைத்தது.
யானை வழித்தடம் தொடர்பான பிரச்னையை ஆராய, சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டி யானை வழித்தடங்களில் சீல் வைக்கப்பட்ட கட்டடங்களை பலமுறை ஆய்வு செய்தது. தொடர்ந்து, கடந்த ஆண்டு, ஆக., மாதம் சோலுார் பேரூராட்சி, மசினகுடி ஊராட்சி உட்பட நான்கு ஊராட்சிகள் அமைப்பு சார்பில், யானை வழித்தடத்தில் உள்ள தனியார் விடுதி கட்டடங்களை காலி செய்யும்படி உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தொடர்ந்து யானை வழிதடத்தில், சீல் வைக்கப் பட்ட விடுதி கட்டடங்களை இடித்து அகற்ற, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து, 'யானை வழித்தடத்தில் உள்ள 39 விடுதிகள் விரைவில் இடிக்கப்படும்' என, மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில், யானை வழித்தடத்தில் உள்ள சர்வேயின், அடிப்படையில், குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளை, நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார். ஊட்டி தாசில்தார் ஷங்கர், சிங்கார வனச்சரகர் தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'யானை வழித்தட பகுதியை ஏற்கனவே, சர்வே செய்யப்பட்டு வரைபடமும் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வே செய்யப்பட்ட பகுதியில், சில இடங் களில் கலெக்டர் ஆய்வு செய்தார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, விரைவில் முடிவு செய்யப்படும்,' என்றனர்.