ADDED : ஆக 21, 2026 05:12 PM

ஊட்டி: மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கு கலை திருவிழா ஊட்டியில் நடந்தது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு, கலை திறனை மேம்படுத்தும் வகையில், பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. மாணவர்கள், நடனம், பாட்டு, இசை, கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் நாட்டுப்புற கலைகள் உட்பட, பல்வேறு போட்டிகளில், ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாவட்டத்தில் உள்ள, நான்கு வட்டங்களில் கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன.
ஊட்டி ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி அரங்கில் நடந்த போட்டிகளில் வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அதில், ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெறும் மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற உள்ளனர்.
