/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
செந்நாய் குட்டிகளுக்கு இடையூறு செய்யாதீர்
/
செந்நாய் குட்டிகளுக்கு இடையூறு செய்யாதீர்
ADDED : ஜன 08, 2024 10:45 PM

கூடலுார்;'மசினகுடி- பொக்காபுரம் சாலையில் மழைநீர் வடிகாலினுள் ஈன்றுள்ள செந்நாய் குட்டிகளுக்கு இடையூறு செய்யாதீர்கள்,' என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
முதுமலை, மசினகுடி விபூதிமலை அருகே, பொக்காபுரம் சாலையில் சில தினங்களுக்கு முன், 7 செந்நாய்கள் தொடர்ந்து முகாமிட்டன.
வனத்துறை மேற்கொண்ட ஆய்வில், சாலை குறுக்கே உள்ள மழை நீர் வாடிகாலினுள் செந்நாய், 4 குட்டிகளை ஈன்று இருந்தது. தொடர்ந்து, வனஊழியர், கண்காணிப்பு பணியில் அமர்த்தப்பட்டனர். அவைகளுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்க, விபூதி மலைக்கு தனியார் சுற்றுலா வாகனங்கள் இயக்க, இரு நாட்களுக்கு முன் வனத்துறையினர் தடை விதித்தனர். அதிருப்தி அடைந்த ஓட்டுனர்கள், சாலை மறியல், வனச்சரகர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், செந்நாய்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்பட்டது. வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'அழிவின் பட்டியலில் உள்ள செந்நாய் கூட்டம் இப்பகுதியில் ஏற்கனவே குட்டிகளை ஈன்றுள்ளது.
தற்போது அப்பகுதியில், 4 குட்டிகள் உள்ளன. அதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
மதிய நேரத்தில் உணவு தேடி செல்லும் செந்நாய்கள், மாலை, 5:30 மணிக்குள் அப்பகுதியில் வந்து முகாமிட்டு குட்டிகளை பாதுகாத்து வருகிறது.
அவைகள் மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளதால், வழியாக பயணிப்பவர்கள் அவைகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.