/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வறட்சியால் கூட்டுறவு தொழிற்சாலைகளில்...இலை வரத்து குறைவு! தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
/
வறட்சியால் கூட்டுறவு தொழிற்சாலைகளில்...இலை வரத்து குறைவு! தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
வறட்சியால் கூட்டுறவு தொழிற்சாலைகளில்...இலை வரத்து குறைவு! தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
வறட்சியால் கூட்டுறவு தொழிற்சாலைகளில்...இலை வரத்து குறைவு! தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
ADDED : மார் 03, 2024 10:49 PM

ஊட்டி,:மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் இலை வரத்து குறைந்து வருவதால், தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் வட்டங்களில், 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கத்தினர்கள் தங்களது தேயிலை தோட்டத்தில் பறிக்கும் இலைகளை கூட்டுறவு தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகின்றனர். கடந்தாண்டில் பருவ மழை பொய்த்ததாலும், நடப்பாண்டில் வறட்சி தொடர்வதாலும் இலை வரத்து படிப்படியாக குறைய துவங்கியுள்ளது.
கடந்த டிச., மாதம் வரை தினசரி, 20 ஆயிரம் கிலோ முதல் 25 ஆயிரம் கிலோ வரை தினசரி இலை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
நடப்பாண்டு மார்ச் மாதம் துவங்கியும் ஒரு சில நாட்கள் பெய்ய வேண்டிய கோடை மழை பெய்யவில்லை. இதனால்தேயிலை தோட்ட பராமரிப்பில் தொய்வு ஏற்பட்டது.
வேலை இழக்கும் அபாயம்:
வறட்சியால் தற்போது பெரும்பாலான கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தினசரி, 5,000 கிலோ முதல் 10 ஆயிரம் கிலோ வரை கொள்முதல் செய்யப்படுகிறது. வறட்சி தொடரும் பட்சத்தில் இலை கொள்முதல் மேலும் குறைய வாய்ப்புள்ளது. 3 'ஷிப்ட்' அடிப்படையில் தொழிற்சாலைகளில் தேயிலை துாள் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால், நிரந்தர தொழிலாளர்கள் மட்டும் சீனியாரிட்டி அடிப்படையில் பணியமர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்காலிக தொழிலாளர்களை இலைவரத்தை கணக்கிட்டு பணியமர்த்த தொழிற்சாலை நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளனர்.
இதன் காரணமாக பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கும் பாதிப்பு
பசுந்தேயிலைக்கு போதிய விலை கிடைக்காத நிலையில், தேயிலை தோட்டங்களை பராமரிப்பதில் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். கோடை மழை கிடைக்காத பட்சத்தில், மே, ஜூன் மாதம் பசுந்தேயிலை வரத்து, 30 சதவீதம் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
விவசாய சங்க செயலாளர் ராமன் கூறுகையில்,''மாவட்டத்தில், 70 சதவீதம் விவசாயிகள் தேயிலை விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இலை வரத்து அடியோடு குறையும் சமயத்தில் விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மாநில அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றார்.

