/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்டத்தில் காலியிடங்களை நிரப்பாததால்... பணிகளில் தொய்வு!கூடுதல் பணி சுமையால் ஊழியர்கள் தவிப்பு
/
மாவட்டத்தில் காலியிடங்களை நிரப்பாததால்... பணிகளில் தொய்வு!கூடுதல் பணி சுமையால் ஊழியர்கள் தவிப்பு
மாவட்டத்தில் காலியிடங்களை நிரப்பாததால்... பணிகளில் தொய்வு!கூடுதல் பணி சுமையால் ஊழியர்கள் தவிப்பு
மாவட்டத்தில் காலியிடங்களை நிரப்பாததால்... பணிகளில் தொய்வு!கூடுதல் பணி சுமையால் ஊழியர்கள் தவிப்பு
ADDED : ஜன 01, 2024 10:48 PM
குன்னுார்:நீலகிரி உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பில், 35 ஊராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள் உள்ளன. அதில், காலி பணியிடங்கள் பெரும்பாலும் நிரப்பப்படாமல் உள்ளதால் வளர்ச்சி பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.
மாதந்தோறும் நடக்கும் கவுன்சில் கூட்டங்களில் கவுன்சிலர்கள் கோரும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாமல் இருப்பதற்கு, காலி பணியிடங்கள் முக்கிய காரணமாக உள்ளது.
உதாரணமாக, குன்னுார் நகராட்சியில் கமிஷனர் பதவி நிரப்பப்படாமல் உள்ளதால், ஊட்டி நகராட்சி கமிஷனர் ஏகராஜ் இங்கு கூடுதலாக பொறுப்பு வகித்து வருகிறார்.
இதேபோல், குன்னுார் நகராட்சியில், நகர திட்ட அலுவலர், பில்டிங் இன்ஸ்பெக்டர், வர்க் இன்ஸ்பெக்டர், டிராப்ட்ஸ் மேன் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. சுகாதார பிரிவில், 3 சுகாதார ஆய்வாளர்கள் பணியில், ஒருவர் மட்டுமே உள்ளதால் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
கூட்டம் நிறுத்தி வைப்பு
கடந்த, 29ம் தேதி நகராட்சி சாதாரண கூட்டத்திற்காக கவுன்சிலர்கள் வந்தனர். 'பொறுப்பு வகிக்கும் கமிஷனர் வர முடியாததாலும், நகர் நல அலுவலர் உட்பட பல அதிகாரிகள் விடுமுறையில் சென்றதாலும், மாதாந்திர கூட்டம் நடத்தப்படவில்லை,' என, கவுன்சிலர்கள் தெரிவித்து சென்றனர்.
இதே போல, ஊட்டி நகராட்சியில் நகர திட்ட அலுவலர், உட்பட பல பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஊராட்சியிலும் பாதிப்பு
மேலும், ஊட்டி, குன்னுார், கூடலுார், கோத்தகிரி என, 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் இரவு காவலர்கள் இல்லை. உபதலை, கொணவக்கரை, நெடுகுளா, எடப்பள்ளி, கடநாடு, முள்ளிகூர், தொட்டபெட்டா ஊராட்சிகளில் செயலாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சில செயலாளர்கள் இரு ஊராட்சிகளில் பணிபுரிவதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடிவதில்லை. பிட்டர் பணியிடங்களும் நிரப்பாததால் தற்காலிக பணியாளர்கள் பிட்டர்களாக பணியாற்றுகின்றனர்.
அதிகரட்டி, பிக்கட்டி உட்பட பல்வேறு பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளதால், மாற்று பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் கூடுதலாக பணியாற்றுகின்றனர்.
குன்னுார், ஊட்டி, கூடலுார், கோத்திரியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 22 பேரில், 16 பேர் மட்டுமே உள்ளதால் பணிசுமையால் குறிப்பிட்ட நேரத்தில் பணிகள் முடிக்க முடிவதில்லை. எனவே, அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்து பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மாவட்ட கலெக்டர் அருணா கூறுகையில்,'' உள்ளாட்சிகளில் உள்ள காலி பணியிடங்களில் நிரப்புவதற்கு, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என்றார்.

