/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனப்பகுதிகளில் குப்பை கழிவை கொட்டுவதால் மலடாகுது மண்! விலங்குகளின் உயிர்களை காவு வாங்குதா ஊராட்சி?
/
வனப்பகுதிகளில் குப்பை கழிவை கொட்டுவதால் மலடாகுது மண்! விலங்குகளின் உயிர்களை காவு வாங்குதா ஊராட்சி?
வனப்பகுதிகளில் குப்பை கழிவை கொட்டுவதால் மலடாகுது மண்! விலங்குகளின் உயிர்களை காவு வாங்குதா ஊராட்சி?
வனப்பகுதிகளில் குப்பை கழிவை கொட்டுவதால் மலடாகுது மண்! விலங்குகளின் உயிர்களை காவு வாங்குதா ஊராட்சி?
ADDED : ஏப் 25, 2025 11:49 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சி, பிளாஸ்டிக் உட்பட குப்பை கழிவுகளை வனப்பகுதியில் கொட்டுவதாலும், குழி தோண்டி புதைப்பதாலும் மண் மலடாகி வருகிறது; பிளாஸ்டிக்குடன் உணவு கழிவுகளை உட்கொள்ளும், இரு மாநில விலங்குகள் பலி அபாயம் அதிகரித்து வருகிறது.
பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சி அமைந்துள்ளது. தமிழக - கேரள எல்லையில் வனத்தை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள இந்த ஊராட்சியில், 15 வார்டுகள் அமைந்துள்ளன. ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை கொட்ட இதுவரை தனியாக இடம் உருவாக்கப்படவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளாக, சேரம்பாடி அருகே குழிவயல் கிராமத்தை ஒட்டிய தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் உள்ள, வருவாய் துறைக்கு சொந்தமான வனப்பகுதியில் கொட்டி வருகிறது.
அப்பகுதியில் திறந்தவெளியில் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை கொட்டியதால், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அதே பகுதியில் பொக்லைன் உதவியுடன் 20 அடி ஆழமுள்ள குழிகளை வெட்டி, அதற்குள் பிளாஸ்டிக், தலைமுடிகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி மூடி விடுகின்றனர்.
விலங்குகள் உயிருக்கு ஆபத்து
ஒரு குழி நிறைவதற்கு பல மாதங்கள் ஆகும் நிலையில், இதனை ஒட்டி நீரோடை உள்ளதால் யானை, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இப்பகுதியில் முகாமிட்டு, திறந்தவெளி குழிகளில் கொட்டப்படும் உணவுடன் கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்கின்றன. இதற்கு முக்கிய ஆதாரமாக குப்பை குழிகள் அருகே காணப்பட்ட யானைகளின் சாணத்தில் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுகின்றன.
இதே பகுதியில் அடிக்கடி யானைகள் மற்றும் வனவிலங்குகள் உயிரிழந்து வரும் நிலையில், பிளாஸ்டிக் மற்றும் தலைமுடிகளை உட்கொண்டு, அதன் மூலம் நோய் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, வன உயிரின ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மலட்டு தன்மைக்கு மாறும் மண்
இங்கு, 20 அடி ஆழமுள்ள குழிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி மூடுவதால், மண்ணின் இயற்கை தன்மை பாதித்து நிலத்தடி நீர் ஓட்டமும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி வருகிறது.
இதன் மூலம், 'உள்ளாட்சி அமைப்புகள் மட்கும் குப்பை; மட்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வாங்கி, பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கும், மட்கும் குப்பைகளை இயற்கை உரமாகவும் மாற்ற வேண்டும்,' என்ற அரசின் திட்டம், இரு மாநில எல்லையில் உள்ள சேரங்கோடு ஊராட்சியில் காற்றில் பறக்க விடப்பட்டு உள்ளது.