UPDATED : அக் 29, 2026 10:56 PM
ADDED : அக் 29, 2026 10:52 PM

குன்னுார்: காலாட்படை தினத்தை முன்னிட்டு வெலிங்டனில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ராணுவத்தின் பெருமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டர் சார்பில், 80 வது காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணனேந்து தாஸ் அறிவுரையின் பேரில், மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 340 மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவாக ராணுவ மையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மாணவர்களுக்கு ராணுவ பாரம்பரியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்களுக்கு நம் ராணுவத்தின் பெருமைமிகு வரலாறு, பாரம்பரியம் மற்றும் சாதனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. ராணுவ பணிகளில் சேர்வதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. வாலாற்று சிறப்புமிக்க ராணுவ பகுதிகள், காவலர் அறை மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் அருங்காட்சியகம் ஆகியவற்றை மாணவர்கள் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியின், மூலம் மாணவ, -மாணவிகளிடையே தேசப்பற்று, ஒழுக்கம் மற்றும் சேவை மனப்பான்மையை வளர்ப்பது குறித்தும் ராணுவத்தில் உள்ள பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்தும் ராணுவ அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
