UPDATED : அக் 07, 2026 05:52 PM
ADDED : அக் 07, 2026 05:06 PM

பாலக்காடு: பாலக்காடு அருகே, விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் பொறியில் சிக்கி முதியவர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி முதுதல பகுதியை சேர்ந்தவர் கருப்பன், 67. இவர், முதுதல ஊராட்சி 3வது வார்டுக்கு உட்பட்ட கோழிக்கோட்டிரி, எஸ்.பி., நகர் அருகேயுள்ள வயல்வெளியில் மீன் பிடிப்பதற்காக நேற்று முன்தினம் மீன் கூடைப்பொறியை அமைத்திருந்தார்.
நேற்று அதிகாலையில் அதனை எடுப்பதற்காக அவர் அங்கு சென்றபோது, அப்பகுதி வயலில் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் பொறியில் எதிர்பாராதவிதமாக உரசி மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மின்சாரம் பாய்ந்ததன் காரணமாக வயலில் இருந்த மீன்களும் பெருமளவில் செத்து மிதந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டாம்பி போலீசாரும், மின்சார வாரிய அதிகாரிகளும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, பட்டாம்பி தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பினர். சட்டவிரோதமாக மின் பொறி அமைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
