/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை கண்காணிப்பு குழுவினர் பதவி உயர்வு கானல் நீர்! பத்தாண்டுகள் கடந்தும் பணி நிரந்தரமும் இல்லை
/
யானை கண்காணிப்பு குழுவினர் பதவி உயர்வு கானல் நீர்! பத்தாண்டுகள் கடந்தும் பணி நிரந்தரமும் இல்லை
யானை கண்காணிப்பு குழுவினர் பதவி உயர்வு கானல் நீர்! பத்தாண்டுகள் கடந்தும் பணி நிரந்தரமும் இல்லை
யானை கண்காணிப்பு குழுவினர் பதவி உயர்வு கானல் நீர்! பத்தாண்டுகள் கடந்தும் பணி நிரந்தரமும் இல்லை
ADDED : அக் 16, 2025 08:27 PM
பந்தலுார்: வனத்துறையில் பணியாற்றும் யானை கண்காணிப்பு குழுவினருக்கு, இன்சூரன்ஸ் மற்றும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்வது நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், இவர்களின் பதவி உயர்வு கேள்விக்குறியாக மாறி உள்ளது. தமிழகத்தில் வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் யானை கண்காணிப்பு குழுவினர், 1,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
வனப்பகுதியில் நடைபெறும் வன குற்றங்கள் மற்றும் கிராமங்கள், விவசாய தோட்டங்களில் யானைகள் வருவதை தடுத்தல் மற்றும் வனவிலங்கு வேட்டை குறித்து கண்காணித்தல் போன்ற பணிகளில், இவர்கள், 24 மணி நேரமும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
'அவுட்சோர்சிங்' முறையில் இவர்களுக்கு தற்போது அரசாணையின்படி, 15,600 ரூபாய் மற்றும் அரசு பங்களிப்பின் உதவியுடன், 21 ஆயிரம் ரூபாய் மாதாந்திர சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வருங்கால வைப்பு நிதி பிடித்தம்
அதில், நடப்பு மாதம் முதல் வருங்கால வைப்பு நிதியில் ஒவ்வொருவரின் பெயரிலும், 3,750 ரூபாய் பிடித்தம் செய்யப்படுவதுடன், இன்சூரன்ஸ் உட்பட பிற பிடித்தங்கள் செய்யப்படுகிறது. இதனால், 13,800 ரூபாய் மட்டும் மாதாந்திர சம்பளம் கிடைக்கிறது.
இந்நிலையில், யானை கண்காணிப்பு குழுவினர் தினசரி தங்களது போக்குவரத்து தேவை மற்றும் குடும்ப தேவைகளை இந்த சம்பளத்தை வைத்து முழுமைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இப்பிரச்னைக்கு அரசு தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார் எம்.எல்.ஏ. ஜெயசீலன் கூறுகையில், ''தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வந்த யானை கண்காணிப்பு மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், 10 ஆண்டுகள் முடிந்ததும் பணி நிரந்தரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். தற்போதும் பத்து ஆண்டுகள் கடந்தும் நிரந்தர பணி வழங்கப்படவில்லை. பதவி உயர்வும் இல்லை.
தற்போது, இவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி மற்றும் இன்சூரன்ஸ் பிடித்தம் செய்து, சொற்ப தொகையை சம்பளமாக வழங்குவதால், மன உளைச்சலுடன். கடன்காரர்களாக பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார். கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''அரசின் பங்களிப்புடன் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருவதுடன், இவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், 14 சதவீதம் ஊழியர் பங்களிப்பும், 20 சதவீதம் அரசு பங்களிப்புடன் வருங்கால வைப்பு நிதி சேமிக்கப்படும்.
இவர்கள் உடல் நலம் பாதிக்கும் போது மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் சிரமப்படும் நிலையில், இன்சூரன்ஸ் திட்டம் பயனாக இருக்கும். இது குறித்து பணியாளர்களிடம் நேரில் விளக்கம் அளிக்கப்பட்ட பின்னர் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது,'' என்றார்.