UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 02:52 PM

கூடலூர்: கூடலூர், புத்தூர்வயலில் கரும்பு தோட்டத்தில் புகுந்த யானை கரும்புகளை ருசி பார்த்தது.
கூடலூர், மாக்கமூலா அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய, வனப்பகுதியில் இரண்டு வாரமாக 'ஓவேலி மக்னா' என, அழைக்கப்படும் காட்டு யானை முகாமிட்டுள்ளது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதுடன், மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனை, விரட்டும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலை கும்கி யானைகள் சீனிவாசன், கிரி உதவியுடன் முதுமலை வனப்பகுதிக்கு விரட்டும் பணியும் ஒருப்புறம் நடந்து வருகிறது.
நேற்று, காலை புத்தூர்வயல் விமலகிரி குடியிருப்புக்குள் நுழைந்த யானை, வீடு அருகே, பயிரிட்டு இருந்த கரும்புகளை வேரோடு எடுத்து ருசித்தது. உடனே, அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த ஊழியர்கள் யானையை வனப்பகுதி விரட்டினர். தொடர்ந்து, மாக்கமூலா வனப்பகுதியில் முகமிட்ட யானையை கும்கி யானைகள் உதவியுடன் முதுமலைக்கு விரட்டு பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.
