/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 'கேட்' அமைத்து பூட்டு! 40 ஆண்டுகளாக சாலை வசதியின்றி தத்தளிக்கும் கிராமம்
/
மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 'கேட்' அமைத்து பூட்டு! 40 ஆண்டுகளாக சாலை வசதியின்றி தத்தளிக்கும் கிராமம்
மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 'கேட்' அமைத்து பூட்டு! 40 ஆண்டுகளாக சாலை வசதியின்றி தத்தளிக்கும் கிராமம்
மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 'கேட்' அமைத்து பூட்டு! 40 ஆண்டுகளாக சாலை வசதியின்றி தத்தளிக்கும் கிராமம்
ADDED : ஆக 20, 2025 09:16 PM

மஞ்சூர்; மஞ்சூர் அருகே தங்காடு தோட்டத்தில் சாலை வசதி இல்லாததால் கடந்த, 40 ஆண்டுகளாக கிராம மக்கள் தவித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட தங்காடு தோட்டத்தில், 30 குடும்பங்கள் கடந்த, 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றன. இங்குள்ள குந்தா அணையை ஒட்டி, மின்வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து, தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர்.
அவர்கள், கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில், 'கேட்' அமைத்து தங்கள் பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையை கிராம மக்கள் பயன்படுத்த முடியாததால், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அவசர தேவைக்கு கூட, பொதுமக்கள், 5 கி.மீ., துாரம் நடந்து வந்து, குந்தாபாலம் பெட்ரோல் பங்க் பஸ் ஸ்டாபில் காத்திருந்து, அரசு பஸ் , தனியார் வாகனங்களை பிடித்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அதில், மக்கள் நடந்து செல்லும் பகுதி அடர்ந்த தேயிலை தோட்டம், சில கி.மீ., புதர் சூழ்ந்து காணப்படுவதால், சிறுத்தை, காட்டெருமை நடமாட்டம் உள்ளது.
மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இலை பறிக்கும் தொழிலாளர்களும், வேறு வழியின்றி தலை சுமையாக இலை மூட்டைகளை துாக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பூட்டு போட்டு அட்டூழியம் இதனால், கிராம மக்களுக்கும் சம்மந்தப்பட்ட நபர்களுக்கும் பல ஆண்டுகளாக தகராறு இருந்து வருகிறது. மத்திய, மாநில அரசு வரை, இந்த பிரச்னை குறித்து அப்பகுதி மக்கள் புகார் மனு அனுப்பினர்.
அதன்பேரில், மாவட்ட நிர்வாக உத்தரவுப்படி, குந்தா வருவாய்துறை, ஊட்டி ஆர்.டி.ஓ., உள்ளிட்டோர் ஆய்வு நடத்தியும், இது நாள் வரை பிரச்னைக்கு தீர்வு கிடைக்காமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கேட்டில் பூட்டு போட்டுள்ளதால் அனைவரும் சிரமம் ஏற்படுகிறது.
என்ன செய்கிறது மின்வாரியம் ? அங்கு அணையை சுற்றி மின்வாரியத்திற்கு சொந்தமான, 25 ஏக்கர்ஆக்கிரமிக்கப்பட்டு தேயிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்துவது, தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையின் போது, 'இடத்தை சர்வே செய்ய வேண்டும்,'என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, கடந்த சில ஆண்டுக்கு முன்பு மின்வாரியம், குந்தா வருவாய் துறையினர் இணைந்து 'சர்வே' பணி மேற்கொண்டனர்.
அதில், மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவது, சர்வே பணி முடிவில் தெரியவந்துள்ளது. ஆனால், இடத்தை மீட்க மின் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
கிராம மக்கள் கூறுகையில், 'மின் வாரிய இடத்தில், தனியார் சேர்ந்த சிலர் கேட் அமைத்து பூட்டு போட்டதால் சாலை வசதி இல்லாமல் கடந்த, 40 ஆண்டுகளாக தவித்து வருகிறோம். வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதில், மாநில அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.