/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலைகாய்கறி, தேயிலை தோட்டங்களில் அதிக ரசாயன பயன்பாடு! இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தால் பயன்
/
மலைகாய்கறி, தேயிலை தோட்டங்களில் அதிக ரசாயன பயன்பாடு! இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தால் பயன்
மலைகாய்கறி, தேயிலை தோட்டங்களில் அதிக ரசாயன பயன்பாடு! இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தால் பயன்
மலைகாய்கறி, தேயிலை தோட்டங்களில் அதிக ரசாயன பயன்பாடு! இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தால் பயன்
ADDED : ஆக 24, 2025 11:21 PM

ஊட்டி; 'நீலகிரியில் காய்கறி மற்றும் தேயிலை உற்பத்திக்கு அதிக ரசாயனம் பயன்படுத்துவதை, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்; இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற பல விவசாயிகள் பேசுகையில்,'நீலகிரியில் காய்கறிகள் மற்றும் தேயிலை உற்பத்திக்கு அதிக ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்.
மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களை சந்தைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் மேட்டுப்பாளையத்தை தாண்டி இங்கு வருவருவதால், உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இதேபோல், வனவிலங்குகள் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்,' என்றனர்.
இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு கலெக்டர் லட்சுமி பவ்யா பேசுகையில், ''அதிக உரம் , பூச்சிக்கொல்லி ஆகியவற்றின் பின் விளைவுகளை, மாவட்ட விவசாயிகளுக்கு உணர்த்தும் வகையில் கடந்த, 2018ம் ஆண்டு முதல், மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில், நஞ்சநாடு, கக்குச்சி, கூக்கல், தும்மனட்டி, கேத்தி, அதிகரட்டி போன்ற பகுதிகளில் ஒவ்வொரு பயிருக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட உரம்,பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி ஆகியவற்றின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதை விவசாயிகள் உணவு வேண்டும்.
நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் உயர் தொழில் நுட்பங்களான, 'டிரோன், பூம் ஸ்ப்ரேயர்' போன்றவற்றை பயன்படுத்தி மருத்து தெளிப்பதால் மிகவும் பயன் ஏற்படும்.
விவசாய நிலங்களில் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற மாவட்ட கமிட்டிக்கு உரிய முறையில் விண்ணப்பம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் வெட்ட கூடாது,'' என்றார்.
ரூ. 62 லட்சம் நிவாரண தொகை தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் சிபிலா மேரி பேசியதாவது:
ஒவ்வொரு தாலுகாவிலும் முதல்வரின் உழவர் நல சேவை மையம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு மையம் அமைப்பதற்கு, 10 லட்சம் ரூபாய், அதில், 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும். சேவை மையம் அமைப்பதற்கு தகுதியுடைய வேளாண் பட்டதாரிகள் தேர்வு நடக்கிறது. அவ்வாறு அமைக்கப்படும் உழவர் நல சேவை மையங்களில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து சேவைகளும் வழங்கப்படும். எடப்பள்ளியில் உள்ள ஒருங்கிணைந்த கிராமப்புற சந்தை வணிக வளாகத்தில் உள்ள, 500 டன் அளவுக்கான கிடங்குகளில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
கூடலுாரில் வன உயிரினங்களால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு கால தாமதம் இன்றி நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்., 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை, 107 பேருக்கு நிவாரண தொகையாக, 62 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.