/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாதாள சாக்கடை திட்டத்துக்கு...மீண்டும் எதிர்பார்ப்பு! கன்டோன்மென்ட் வாரியத்தில் இழுபறி
/
பாதாள சாக்கடை திட்டத்துக்கு...மீண்டும் எதிர்பார்ப்பு! கன்டோன்மென்ட் வாரியத்தில் இழுபறி
பாதாள சாக்கடை திட்டத்துக்கு...மீண்டும் எதிர்பார்ப்பு! கன்டோன்மென்ட் வாரியத்தில் இழுபறி
பாதாள சாக்கடை திட்டத்துக்கு...மீண்டும் எதிர்பார்ப்பு! கன்டோன்மென்ட் வாரியத்தில் இழுபறி
ADDED : ஜன 14, 2024 11:41 PM

குன்னுார்:குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில், 50 கோடி ரூபாய் மதிப்பிலான பாதாள சாக்கடை திட்ட பணி நிறுத்தப்பட்டதால், மீண்டும் பணிகள் துவங்க தாமதம் ஏற்பட்டுள்ளது.
குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில், 25 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த, 2019ம் ஆண்டு, 50 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டது.
2020ம் ஆண்டு அக்.,2ல் புனே ஒப்பந்த நிறுவனம் மூலம் , 'கண்டைனர்' அலுவலகங்கள் கொண்டு வரப்பட்டு ஆரம்ப பணிகள் துவங்கியது. அப்போது, வாரிய துணை தலைவராக இருந்த பாரதியார்,'கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் இந்த பணிகள், 2 ஆண்டுகளுக்குள் முடித்து திட்டம் செயல்பாட்டுக்கு வரும்,' என, அறிவித்தார். எனினும் பணிகளில் தொய்வு ஏற்பட்டு முழுமை பெறவில்லை.
இதனால், 2022ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி ஒப்பந்த நிறுவனத்திற்கு, கன்டோன்மென்ட் சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. பணியும் நிறுத்தப்பட்டது.
உத்தரவாதம் ரத்து
இதனால், ஒப்பந்த நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. எனினும், நீதிமன்ற உத்தரவுக்கு பின்பு, 2022ம் ஆண்டு செப்.,ல் நிறுவனத்தின், 2.7 கோடி ரூபாய்க்கான வங்கி உத்தரவாதம் ரத்து செய்யப்பட்டது. இதனால், கன்டோன்மென்ட் வாரியத்தில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தோல்விக்கு யார் காரணம்
கன்டோன்மென்ட் வாரிய முன்னாள் துணை தலைவர் வினோத்குமார் கூறுகையில், ''கடந்த 2013ம் ஆண்டு வாரிய கூட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம், கேட்டில் பவுண்டில் துவங்கப்பட்டது. குடியிருப்பு அருகில் வேண்டாம் என மக்கள் தெரிவித்ததால் அங்கு நிறுத்தப்பட்டது. பிருந்தாவன் அருகில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்நிலையில், வாரிய அலுவலகம் அருகே வெலிங்டன் மார்க்கெட் இடத்தில், திருமண மண்டபம்; வணிக வளாகம்; தங்கும் விடுதி கட்ட ஒப்புதல் பெறப்பட்ட இடத்தில், 2019ல் அ.தி.மு.க.,வினர் பாதாள சாக்கடை திட்டத்தை துவக்கியதால் தோல்வியில் முடிந்தது. பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது,'' என்றார்.
மறு திட்டத்துக்கு பரிந்துரை
கன்டோன்மென்ட் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற, பல இடங்களிலும் தடுப்பு சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளன. சாலைகள் தோண்டப்பட்டன. முறையாக பணிகளை மேற்கொள்ளாத நிறுவனத்திற்கு 'நோட்டீஸ்' அளித்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
மீண்டும் பணிகள் துவங்க மறு திட்டம் தயார் செய்து புனே தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் புதிய டெண்டர் விடப்பட்டு செயல்படுத்தப்படும்,' என்றனர்.