நீலகிரியில் 'எக்ஸ்பிரஸ்' பஸ் பயணத்தில் தொடரும்... குளறுபடிகள்!கட்டண சுரண்டலால் தவிக்கும் மலைவாழ் மக்கள்
நீலகிரியில் 'எக்ஸ்பிரஸ்' பஸ் பயணத்தில் தொடரும்... குளறுபடிகள்!கட்டண சுரண்டலால் தவிக்கும் மலைவாழ் மக்கள்
ADDED : ஆக 29, 2026 03:42 AM

குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில், 'எக்ஸ்பிரஸ்' அரசு பஸ் பயண திட்டத்தில் தொடரும் குளறுபடிகளால், மலை மாவட்ட மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம், 367 பஸ்கள் 6 கிளைகளிலிருந்து இயக்கப்படுகின்றன. 'இவை அனைத்தும் சாதாரண கட்டண பஸ்கள்,' என, பதிவு பெற்ற போதும், 167 பஸ்கள் மட்டுமே சாதாரண கட்டணமாக பஸ்களாக இயக்கப்படுகின்றன. மீதமுள்ள, 180 பஸ்கள் சமவெளி பகுதிகளுக்கு இயக்கப்பட்டு, 80 கிலோ மீட்டருக்கும் மேல் செல்வதாக கூறி, 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த ஆட்சியில். 35 கிலோ மீட்டருக்குள், 110 புறநகர் பஸ்கள் மகளிருக்கு கட்டணமில்லா பயணமாக இயக்கப்பட்டன. 'தற்போது அரசு வெளியிட்ட அறிவிப்பில் எக்ஸ்பிரஸ் பஸ்களில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்,' என்ற அறிவிப்பு, நீலகிரி மாவட்டத்துக்கு பொருந்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வழித்தட ரத்தால் பாதிப்பு மேலும், மாவட்டத்தில் அரசு பஸ்கள் இயங்கி வந்த, 110 வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டு, மினிபஸ்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதில், தற்போது பல பஸ்கள் இயங்குவதில்லை. வழித்தட உரிமமும் ரத்து செய்யவில்லை. ஒருசில வழித்தடங்களில் ஓரிரு டிரிப்கள் மட்டும் இயக்கப்படுவதால், மினி பஸ்களில் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுகின்றன. இதனால், கிராமப்புற மக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர், மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு பலமுறை, பல்வேறு அமைப்புகள் கொண்டு சென்றும் எந்த பயனும் ஏற்படவில்லை. சோர்ந்துபோன மக்கள் வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் செய்கின்றனர். தன்னிச்சையாக கட்டணம் உயர்த்திய மினி பஸ்களில், 6 கி.மீ.,15 ரூபாய்; 9 கி.மீ., 18 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும், விதிகள் மீறி எக்ஸ்பிரஸ் பெயரில் இயங்கும் அரசு பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம், 11 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
குன்னுார் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கூறுகையில்,''மாவட்டத்தில் முற்றுரிமை பெற்றுள்ள அரசு போக்குவரத்து கழகமும், லாப நோக்கில் இயங்கும் தனியார் மினி பஸ்களும் ஏழை மலைவாழ் மக்களை சுரண்டி வருகின்றன. தடுக்க வேண்டிய போக்குவரத்து துறையும், மாவட்ட நிர்வாகமும் அமைதி காத்து வருகின்றன. தமிழகத்தில் இதர மாவட்டங்களில் வாழும் மகளிர் மட்டும், முதல்வரின் அறிவிப்பு இந்த சலுகையை அனுபவிக்கும் போது, இங்கு நிலவும் குளறுபடியால், நீலகிரி மாவட்ட மகளிருக்கு அதன் பலன் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. எனவே, இப்பகுதியிலும் எக்ஸ்பிரஸ் பஸ்களில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
நீலகிரி மாவட்ட போக்குவரத்து கழக பொது மேலாளர் ஜெய்சங்கர் கூறுகையில்,''நீலகிரி மாவட்டத்தில், 'எக்ஸ்பிரஸ்' அரசு பஸ் பயண திட்ட செயல்பாடுகள் குறித்து தற்போது ஏதும் கூற இயலாது. மாற்றங்கள் ஏற்படாமல் போனால், இங்கிருந்து மேட்டுப்பாளையம் சென்று, வேறு பஸ்களுக்கு மாறி பயணம் செய்து கொள்ளலாம்,'' என்றார்.
