தொழிற்சாலையின் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரிப்பு
தொழிற்சாலையின் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரிப்பு
ADDED : மார் 25, 2026 08:22 PM

குன்னுார்: குன்னுார் அருகே, அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் தேசிய தொழிலாளர் சங்க ( என் இ.யு.,) பொன்விழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, பாதுகாப்பு அமைச்சக துறைசார் கவுன்சில் உறுப்பினர் குருதயாள் சிங் பேசுகையில்,''காங்., ஆட்சியில் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் வெங்கட்ராமன் காலகட்டத்தில், மகாராஷ்டிரா மற்றும் தென் மாநிலங்களில், ஆவடி, திருச்சியில் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டதில் கூட்டமைப்பிற்கு பெரும் பங்கு உண்டு.
கார்டைட் தொழிற்சாலையில் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. உற்பத்தி அதிகரித்தால் மட்டுமே தொழிலாளர்களின் வருமானம் உயரும். அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்கும். நாடு, தொழில், தொழிலாளர்கள் என மூன்றும் சரியாக இருந்தால் வேலையில்லாத திண்டாட்டம் விலகும். தொழிலாளர்கள் வேற்றுமையை மறந்து ஒன்றிணைந்து செயல்பட்டால் தொழில் துறையையும், வருங்கால சந்ததியினரையும் காப்பாற்றலாம்,'' என்றார்.
கார்டை தொழிற்சாலை முதன்மை பொது மேலாளர் விகாஸ் பூர்வார் பேசுகையில்,''ஐ.என்.டி.யு.சி., ஐ.என். இ.டபிள்யு.எப்., ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும் என்.இ.யு., தொழிற்சங்க பொன் விழாவில், பங்கேற்பது பெருமை அளிக்கிறது. நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே பாலமாக செயல்படுவதில் இச்சங்கம் சிறப்பாக செயல்படுகிறது. தொழிலாளர்களின் குறைகள் பேச்சுவார்த்தை மூலம் நல்லிணக்கத்துடன் தீர்த்து வைக்கிறது, என்றார்.
விழாவில், ஐ.என்.டி.டபிள்யு.எப்., பொது செயலாளர் சீனிவாசன், என் ஜி.யு., பொதுச்செயலாளர் திலிப் குமார், தலைவர் ஜோஷி லாசர், கார்டைட் தொழிற்சாலை பொது மேலாளர் ராஜேந்திர குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
