/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விலை வீழ்ச்சியில் முட்டைகோஸ்: அறுவடை செய்ய விவசாயிகள் தயக்கம்
/
விலை வீழ்ச்சியில் முட்டைகோஸ்: அறுவடை செய்ய விவசாயிகள் தயக்கம்
விலை வீழ்ச்சியில் முட்டைகோஸ்: அறுவடை செய்ய விவசாயிகள் தயக்கம்
விலை வீழ்ச்சியில் முட்டைகோஸ்: அறுவடை செய்ய விவசாயிகள் தயக்கம்
ADDED : ஜன 01, 2024 09:15 PM

குன்னுார்;நீலகிரியில் முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி அடைந்து கிலோவுக்கு குறைந்தபட்சம், 4 ரூபாய் முதல் 8 ரூபாய் கிடைப்பதால் சிறு விவசாயிகள் அறுவடை செய்யாமல் விட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைகிழங்கு, பீன்ஸ், காலிபிளவர், முட்டைகோஸ், மேரக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.
அதில், கடந்த ஆண்டு, கிலோ, 50 ரூபாய் வரை விலை கிடைத்து வந்த முட்டைகோஸ் நேற்றைய நிலவரப்படி, குறைந்தபட்சம், 4 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
கூலிக்கு ஆட்களை வைத்து எடுத்தாலும் நஷ்டம் ஏற்படும் என்பதால் பல விவசாயிகளும் அதனை எடுக்காமல் விட்டுள்ளனர்.
அறுவடைக்கு தயாராக இருந்தும் பல விவசாயிகள் எடுக்காமல் உள்ளனர். விவசாயிகள் கூறுகையில், 'குண்டல்பேட்டை, தாளவாடி உட்பட வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் வீரிய ரக காய்கறிகள் பயிரிடப்படுகிறது. இதனால் மலை காய்கறிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை.
நீலகிரியின் காலநிலையில் விளையும் முட்டைகோஸ் மவுசு இருந்தும் மற்ற இடங்களில் அதிகம் விளைவிப்பதால் விலை கிடைப்பதில்லை,' என்றனர்.
அதேநேரத்தில் வெளி மார்க்கெட்டில் முட்டைகோஸ் கிலோ, 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், நுகர்வோரும் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் அவலம் நீடிக்கிறது. எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண தோட்டக்கலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

