/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுந்தேயிலை வரத்து குறைவு; விவசாயிகள் கவலை
/
பசுந்தேயிலை வரத்து குறைவு; விவசாயிகள் கவலை
ADDED : ஜன 28, 2024 11:38 PM

கோத்தகிரி;-நீலகிரியில், கடும் குளிர் காரணமாக, பசுந்தேயிலை வரத்து குறைந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரியில், நீர் ஆதாரமுள்ள விளை நிலங்களில் மலைக்காய்கறி சாகுபடி செய்தாலும், தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, பசுந்தேயிலை விலை, தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது, 17 ரூபாய் மட்டுமே, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு விலை கிடைத்து வருகிறது.
இடுப்பொருட்களின் விலையேற்றம், கூலி உயர்வு உள்ளிட்ட செலவினங்கள் அதிகமாக இருப்பதால், கிடைத்துவரும் விலை, விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. இதனால், தோட்டங்களையும், குடும்பத்தையும் பராமரிக்க முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், மேகமூட்டமான காலநிலை மற்றும் பனிப்பொழிவு காரணங்களால், குளிரான காலநிலை நிலவுகிறது. இதனால், தோட்டங்களில் அரும்புகள் துளிர்விடாமல், மகசூல் குறைந்துள்ளது.
ஏற்கனவே, விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பசுந்தேயிலை மகசூல் குறைந்து வருவது கவலை அடைய செய்துள்ளது.