புதர்மண்டி நீரோடைபோல மாறிய ஆற்று பகுதிகள்...விவசாயிகள் கவலை!: 1000 ஏக்கர் சாகுபடி நிலங்கள் மூழ்கும் அபாயம்
புதர்மண்டி நீரோடைபோல மாறிய ஆற்று பகுதிகள்...விவசாயிகள் கவலை!: 1000 ஏக்கர் சாகுபடி நிலங்கள் மூழ்கும் அபாயம்
UPDATED : செப் 25, 2026 05:00 AM
ADDED : செப் 24, 2026 05:41 PM

ஊட்டி : ஊட்டி அருகே, 1000 ஏக்கரில் மலை காய்கறிகள் மேற்கொள்ளும் இடத்தின் பிரதான ஆறு புதர் மண்டி சுருங்கி வருவதால், வடகிழக்கு பருவ மழை சமயத்தில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் விளை நிலங்களில் மேற்கொள்ளப்படும் துார் வாரும் பணிகள் விவசாய பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. விவசாய தேவைகளுக்கான, மண் அரிப்பை தடுக்கும் வகையில், பல்வேறு துார் வாரும் பணிகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.
மலையில் விளையும் காய்கறிகளான கேரட் , உருளைக்கிழங்கு , முட்டைகோஸ் மற்றும் தேயிலை பயிரிடும் விவசாயிகள் பெரும்பாலும் மழை நீரையும், விளை நிலங்களை ஒட்டி ஓடும் ஆறு. நீரோடைகளையும் நம்பி விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
மழை காலத்தில் அடைப்பு இந்நிலையில், பருவ மழை காலங்களில் மலையில் இருந்து அடித்து வரப்படும் மண் மற்றும் செடி கொடிகளால் நீரோடைகளில் அடைப்பு ஏற்படுகிறது. சில இடங்களில் தவறான விவசாய முறைகளால் சில சமயங்களில் வளமான மேல் மண் அடித்து செல்லப்பட்டு நீரோடைகளில் தேங்குகிறது. மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், வறட்சி காலங்களில் விவசாய பாசனத்திற்கு தடையின்றி நீர் கிடைக்கவும் குளங்கள், குட்டைகள் மற்றும் நீர் சேகரிப்பு அமைப்புகள் துார்வாரப்படுவது வழக்கம்.
வெள்ள புகுந்து விடும் அபாயம் இப்பணிகள், வேளாண் பொறியியல் துறை வாயிலாக மேற்கொள்ளப்படுவதுடுன், தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படுகிறது. மற்றும் நீர் வரத்து பாதைகளில் தேங்கும் வண்டல் மண்ணை அகற்றி ஆறு, நீரோடைகள் அகலப்படுத்த படுகின்றன.
ஊட்டி அருகே, கப்பத்தொரை, எம். பாலாடா, கல்லக்கொரை ஹாடா, மணலாடா பகுதியை சுற்றி, 1000 ஏக்கரில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்குள்ள பிரதான ஆறு புதர்மண்டி, வண்டல் மண் தேங்கி நீரோடை போல சுருங்கியுள்ளது. இதனால், மழை நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை வரும் மாதம் துவங்க உள்ள நிலையில் , நீரோடை தூர்வாரப்படாததால் மலை காய்கறி தோட்டங்களில் வெள்ள புகுந்து விடும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயி சந்திரன் கூறுகையில்,''மணலாடா பகுதியில் மலை காய்கறி விவசாயம் மேற்கொண்டு வருகிறேன். இங்குள்ள பிரதான ஆற்றை பராமரிக்காததால், புதர் மண்டி நீரோடை போல சுருங்கி உள்ளது. இதனால், பருவ மழை சமயத்தில் காய்கறி தோட்டங்கள் பாதிக்கப்படும் சூழல் இருப்பதால், வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நீரோடையை முழுமையாக தூர்வார வேண்டும்,'' என்றார்.
